பிரதமர் மோடி சென்னை வருகை; வீட்டு காவலில் வைக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்
பிரதமர் மோடி சென்னை வருகை; வீட்டு காவலில் வைக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்
தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
Published : October 11, 2026 at 4:07 PM IST
சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி - வடபழனி இடையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இதையடுத்து, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அவர் தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து சென்னை ஐஐடி-யில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை நேரில் பார்வையிட்டார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதும், அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு (SIR) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க:பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?
இந்தச் சூழலில், பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
அப்போதும் வீட்டிலிருந்தபடியே go back modi, 'வாக்குத் திருடனே திரும்பி போ' உள்ளிட்ட பதாகைகளை காங்கிரஸ் நிர்வாகிகள் ஏந்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதேபோல் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராகவும், SIR விவகாரம் தொடர்பாகவும் பதாகைகளை ஏந்தி இளம் பெண்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது, "பிரதமர் மோடி அவர்களே, ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வாக்குத் திருட்டு தொடர்பாக எப்போது பேசப் போகிறீர்கள்? உங்கள் டெல்லி அரசால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு ஏன் வருகிறீர்கள்?" என கோஷம் எழுப்பினர்.
மேலும், "முதலமைச்சர் விஜய் அவர்களே, SIR தொடர்பாக மௌனம் காப்பது ஏன்? தமிழ்நாட்டில் கேள்வி கேட்பது எப்போது குற்றமாக மாறியது?" என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.