📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 28, 2026 07:03 AM

பிரதமர் வேட்பாளர் ராகுலா, விஜயா? த.வெ.க.,

பிரதமர் வேட்பாளர் ராகுலா, விஜயா? த.வெ.க.,

- நமது நிருபர் -

'வரும் 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின், நாட்டின் பிரதமராக விஜய் வருவார்' என, முதல்வரின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் கணித்துள்ள நிலையில், ''ராகுல் தான் பிரதமர்,'' என, காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

'வரும் 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், 40 தொகுதிகளில், த.வெ.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.

'தெலுங்கானாவில் கவிதா, ஆந்திராவில் ஜெகன்மோகன், உ.பி.,யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணிகளுக்கு, 50 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி மொத்தம், 130 எம்.பி.,க்கள் அணியை உருவாக்கி, அதற்கு விஜய் தலைமை வகிப்பார். காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் பிரதமராவார்' என, ஜோதிடர் ரத்தன் பண்டிட் கணித்துள்ளார்.

அவரது கணிப்பு தகவல்களை, த.வெ.க.,வுக்கு ஆதரவாக செயல்படுகிற, 'வெற்றி டிவி' நிர்வாக இயக்குநர் சிங்காரவேலன் வெளியிட்டுள்ளார். தமிழக அரசியலில் இருந்து, தேசிய அரசியலுக்கு விஜயின் பயணம் விரிவடையுமா என்ற விவாதத்தை, ஜோதிடரின் கணிப்பு உருவாக்கி, காங்கிரசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் தேவன். இவர், ரஜினி நடித்த 'பாட்ஷா' படத்தில் நடிகை நக்மாவின் தந்தையாக நடித்தவர். காங்கிரசில் சேர்ந்து தன் அரசியல் பயணத்தை துவக்கினார். பின், கேரள மக்கள் கட்சி என்ற தனிக்கட்சி துவக்கினார்.

அதன்பின், பா.ஜ.,வில் சேர்ந்தார். அங்கு அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறினார். தற்போது, அவரை கேரள மாநில த.வெ.க., தலைவராக நியமிக்க பேச்சு நடந்து வருகிறது. செப்., 11ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், 'இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள், துாத்துக்குடி மாவட்ட த.வெ.க.,வினரால் ஒட்டப்பட்டு உள்ளன. அதற்கு பதிலடியாக, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்' என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் எதிர்ப்பு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து, காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியதாவது: காங்கிரஸ், 140 ஆண்டு கடந்த பாரம்பரியமிக்க, பழமையான கட்சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என்றால், காங்கிரஸ் தான் காரணம்.

தமிழகத்தில், 50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. தற்போது ஆட்சியில் உள்ளோம். காங்கிரஸ் கட்சியின் முகம் ராகுல். இந்திய மக்கள் முகம் ராகுல். எங்களை பொறுத்தவரை ராகுல் தான் பிரதமர்.

யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சொல்லி கொண்டு போகட்டும். இந்தியா முழுதும் காங்கிரஸ் கட்சி ஆளும்; பிரதமர் நாற்காலியில் ராகுல் அமர்ந்து, மக்களுக்கு பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ராஜேஷ்குமாரின் கருத்தை வரவேற்றுள்ள காங்கிரசார், 'ராகுலின் வழியில் அமைச்சர் நடக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு இது பெருமை' என, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.