📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 15, 2026 07:03 AM

பன்னோக்கு மருத்துவ பணியாளரை அழைத்துப் பேச வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

பன்னோக்கு மருத்துவ பணியாளரை அழைத்துப் பேச வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை: ‘போராடும் பன்னோக்கு மருத்துவ பணியாளரை முடக்காமல், அரசு அழைத்து பேச வேண்டும்,’ என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் இச்சங்கத்தின் மாநில தலைவர் லியாகத்அலி, பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியதாவது: பொதுச் சுகாதார துறையில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் சங்கத் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, போராட்டம் நடத்தவிடாமல் போலீசார் தடுத்துள்ளனர்.

வாழ்வாதாரம், பணிப்பாதுகாப்புக்காக போராடும் ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டிய அரசு, அதை முடக்க முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசு ஊழியர்களின் போராட்டங்கள், உரிமைக் குரல்களை நிரந்தரமாக ஒடுக்கிவிட முடியாது.

ஆட்சிகள் மாறலாம், ஆட்சியாளர்கள் மாறலாம். ஆனால் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே ஜனநாயகத்தின் மீதான உண்மையான அக்கறை. போராட்டத்தை தடுப்பதோ, தலைவர்களை வீட்டுக்காவலில் வைப்பதோ நிரந்தர தீர்வாக அமையாது.

மாறாக பாதிக்கப்பட்ட ஊழியர்களை அழைத்துப்பேசி, ஏற்கக் கூடிய தீர்வுகளை உருவாக்குவதே பொறுப்புள்ள அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். எனவே பல்நோக்கு பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.