பொன்னேரி அரசு மருத்துவமனை பெண் ஊழியர் மீது தீ வைப்பு: இளைஞர் பிரகாஷ் போலீசாரால் சுட்டுப்பிடிப்பு!
பொன்னேரி அரசு மருத்துவமனை பெண் ஊழியர் மீது தீ வைப்பு: இளைஞர் பிரகாஷ் போலீசாரால் சுட்டுப்பிடிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்துவரும் ராஜேஸ்வரி மீது, நேற்று பணி முடிந்து வெளியே சென்றபோது பிரகாஷ் என்பவர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூரத் தாக்குதலில் சுமார் 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ராஜேஸ்வரி, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் தலைமறைவான பிரகாஷைத் தீவிரமாகத் தேடிவந்த போலீசார், அவர் மாதவரம் பகுதியில் பதுங்கியிருப்பதை உறுதிசெய்து அங்கு சென்றனர். அப்போது அவரைப் பிடிக்க முயன்றபோது, பிரகாஷ் போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சிவக்குமார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பிரகாஷின் காலில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த பிரகாஷை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த வழக்கில் தேடப்பட்ட நபர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். ராஜேஸ்வரியை குறிவைத்து பிரகாஷ் ஏன் தாக்குதல் நடத்தினார், எதற்காக இதுபோல பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார் என்பதெல்லாம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்கள்.