📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 18, 2026 07:30 AM

பொருளியல் யோசனை: மசெக, பாட்டாளிக் கட்சி இணையத்தில் தொடர் விவாதம்

பொருளியல் யோசனை: மசெக, பாட்டாளிக் கட்சி இணையத்தில் தொடர் விவாதம்

பாட்டாளிக் கட்சியின் பொருளியல் பரிந்துரைகள் தொடர்பாக அக்கட்சிக்கும் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும் இடையிலான விவாதம் இணையத்தில் விடாமல் தொடர்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) முன்னாள் மூத்த துணை அமைச்சர் லீ யி ஷியான் தமது ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்து அந்த விவாதத்தை மேலும் நீட்டித்தது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் ஒன்றின் மூலம், அரசாங்கத்தின் அணுகுமுறையிலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்ட ஓர் அணுகுமுறையை பாட்டாளிக் கட்சி முன்வைப்பதுபோல் தெரிவதாக அந்தப் பதிவில் திரு லீ குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூர் பொருளியலின் எதிர்காலம் குறித்த தீர்மானம் ஒன்றை பாட்டாளிக் கட்சி தாக்கல் செய்திருந்ததுடன், நாட்டின் வளர்ச்சிக்கான மாற்று ‘பொருளியல் திட்ட வரைவை’ அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்க முற்பட்டனர்.

அது பற்றிக் குறிப்பிட்ட திரு லீ, “உற்றுநோக்கினால் அந்தக் கட்சி முன்வைக்கும் மாற்று யோசனைகளுக்குப் பின்னால் பெரும்பாலும் தெளிவான, நிலையான, உறுதியான அடித்தளம் கொண்ட திட்டம் எதுவும் இருப்பதில்லை.

“இது ஒரு கடுமையான கொள்கை விவாதம் அல்ல. இது அரசியல் ரீதியாக ஆதாயம் தேடும் ஒரு செயல்பாடு,” என்று தெரிவித்திருந்தார்.

அந்தப் பதிவை அமைச்சர்கள் கா. சண்முகம், சீ ஹொங் டாட் மற்றும் இங் சீ மெங் ஆகியோர் பகிர்ந்தனர்.

பாட்டாளிக் கட்சி, பொருளியல் குறித்த தனது கருத்துகளை முன்வைத்துவிட்டு பின்னர் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டதாக திரு சண்முகம் கூறினார். அதேபோல, திரு லீயின் கருத்துகளுடன் தாம் முழுமையாக உடன்படுவதாக திரு சீ தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

அதேவேளை, தீர்மானத்தை முன்மொழிந்த பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கென்னத் தியோங்கும் ஜேமஸ் லிம்மும் திரு லீயின் கருத்துகளுக்கு தங்களது சமூக ஊடகப் பதிவுகள் வாயிலாகப் பதிலளித்தனர்.

பாட்டாளிக் கட்சியின் வாதங்களை திரு லீ தவறாகச் சித்திரித்ததாக, அல்ஜுனிட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தியோங் தமது பதிவில் குறிப்பிட்டார்.