📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 01, 2026 03:00 PM

பருவநிலை மாற்றத் தாக்கங்களைச் சமாளிப்பதில் ஆசியான் கவனம் செலுத்த வேண்டும்: கிரேஸ் பூ, சிங்க‌ப்பூர் செய்திகள்

பருவநிலை மாற்றத் தாக்கங்களைச் சமாளிப்பதில் ஆசியான் கவனம் செலுத்த வேண்டும்: கிரேஸ் பூ, சிங்க‌ப்பூர் செய்திகள்

ஆசியான் அமைப்பு பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை மேம்படுத்த வேண்டும் என சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ வலியுறுத்தி உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக வட்டார மின் தொகுப்பை வலுப்படுத்துவது, பருவநிலை நிதியை அதிகரிப்பது, பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு எதிராகத் தனது மீள்தன்மையை உயர்த்துவது ஆகியவற்றில் ஆசியான் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றம் தொடர்பான கண்ணோட்டத்தை உள்ளடக்கிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில் பேசிய அவர், அடுத்த ஆண்டு ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பைச் சிங்கப்பூர் வகிக்கும் போது இந்தப் பிரச்சினைகள் தொடர்பான நடைமுறை ஒத்துழைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றார்.

பருவநிலை மாற்றம் குறித்த ஆசியான் வட்டார மக்களின் மனநிலையை அளவிட ஈராண்டுக்கு ஒருமுறை ‘தென்கிழக்கு ஆசிய பருவநிலை நிலவர ஆய்வு 2026’ நடத்தப்படுகிறது.

ஆறாம் ஆண்டாக நடத்தப்பட்ட அந்த ஆய்வின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை, ஐஎஸ்இஏஎஸ் – யூசோப் இஷாக் கல்வி நிறுவனத்தின் தென்கிழக்காசியப் பருவநிலை மாற்றத் திட்டக்குழுவும் சிங்கப்பூர் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ புத்தாக்க நகரங்கள் மையமும் இணைந்து வியாழக்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்டன.

வேலையின்மை மற்றும் பொருளியல் மந்தநிலை, பருவநிலை மாற்றம் மற்றும் கடுமையான வானிலை நிகழ்வுகள் ஆகியவையே தென்கிழக்கு ஆசிய மக்கள் எதிர்கொள்ளும் முதன்மையான இரண்டு கவலைகள் என ஆய்வு கண்டறிந்தது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலகளாவிய எரிசக்திச் சந்தைகளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளதாக திருவாட்டி ஃபூ தமது உரையில் குறிப்பிட்டார்.

“தென்கிழக்கு ஆசியாவும் இதிலிருந்து தப்பவில்லை. இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியை பெரிதும் நம்பியிருக்கும் ஒரு வட்டாரத்திற்கு, எரிபொருள் விலை உயர்வு என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையில் உடனடிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய மாற்றத்திற்கு எரிசக்தி நெருக்கடி ஒரு முக்கியக் காரணம் என்றும் அதேநேரம் இந்த உருமாற்றத்தை நிறுத்தி வைப்பது தவறான நடவடிக்கையாக அமையக்கூடும் என்றும் திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்.