📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 11, 2026 12:01 PM

பஸ் வசதிகூட இல்லாத ஊர், வானம் தொடும் கனவு... `ஜீ தமிழ்' சுகந்திப்ரியாவின் நம்பிக்கை!

பஸ் வசதிகூட இல்லாத ஊர்,
வானம் தொடும் கனவு... `ஜீ தமிழ்' சுகந்திப்ரியாவின் நம்பிக்கை!

பஸ் வசதிகூட இல்லாத ஊர், வானம் தொடும் கனவு... `ஜீ தமிழ்' சுகந்திப்ரியாவின் நம்பிக்கை!

கடைசியா ஒரு சேனல்ல வேலை கிடைச்சது. வாய்ஸ் ஓவர் பண்றது, சின்னச்சின்ன வீடியோக்கள் பண்றதுனு போயிட்டு இருந்துச்சு. அப்போ என் ஃபிரெண்ட் ஒருத்தங்க, ‘தேநீர் இடை வேளை’ சேனல்ல ஆள் எடுக்குறாங்கன்னு சொன்னாங்க.

கிராமத்து மொழிநடை... அலட்டல் இல்லாத பேச்சு... வெள்ளந்தியான சிரிப்பு - இவைதான் சுகந்திப்ரியாவின் அடையாளங்கள். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஓபுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்திப்ரியா, இன்று `ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மகா நடிகை’ மூலம் லட்சக்கணக்கான மக்களின் கவனம் ஈர்த்திருக்கிறார்.

“எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பெல்லாம் உனக்குக் கிடைக்கணும்... உனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கணும்னு என்னை ஊக்கப்படுத்திட்டே இருந்தவங்க என் அம்மா வும், மாமியாரும்தான். திண்டுக்கல் மாவட்டம், பழனி பக்கத்துல இருக்குற ஓபுலாபுரம்தான் எங்க ஊரு. பஸ் வசதிகூட இல்லாத ஊர்... எனக்கோ வானத்தைத் தொட்டுடணும்னு ஆசை. கனவுகள் இருந்துச்சு... ஆனா, பாதை காட்டத்தான் யாரும் இல்லை.

எங்க அப்பா சமையல் மாஸ்டரா வேலை பார்த்துட்டு இருந்தார். அம்மா கூலி வேலைக்குப் போவாங்க. ரெண்டு பேருக்குமே வெளி உலகம் தெரியாது. ஆனா, நான் படிக் கணும், வேலைக்குப் போகணும்னு சொல்லும்போதெல்லாம், ‘நீ படித்தா’னு சொல்லுவாங்க. அப்பா இறந்து அஞ்சு வருஷம் ஆகிடுச்சு. இப்போ டிவில என்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், ‘இதைப் பார்க்க அப்பா இல்லையே’ன்னு மனசு பாரமாயிடும். அவர் உயிரோட இருந்திருந்தா நிச்சயம் ஊர் முழுக்க கொண் டாடித் தீர்த்துருப்பார்...”

- சுகந்திப்ரியாவின் குரல் தழுதழுக்கிறது. சில நொடி களுக்குப் பிறகு மீண்டும் பேசத் தொடங்குகிறார்.

“எனக்கு ஒரு அண்ணன் இருக்கார். அவர் கல்யாணம் பண்ணிட்டு தனியா போயிட்டார். அதனால, குடும்பப் பொறுப்பை நானும் எடுத்துக்கணும்னு சின்ன வயசுலயே புரிஞ்சிடுச்சு. நான் ஸ்கூல் படிச்சதெல்லாம் எங்க ஊர்லதான். அப்போ மீடியாவைப் பத்தி பெருசா எந்த ஐடியாவும் இல்லை. ஒரு நாள் என் ஃபிரெண்ட், ‘நீ நல்லா பேசுற... மீடியாவுக்குப் போகலாம்ல!’னு சாதாரணமா சொன்னா. அவ சொன்னது மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. அந்த நிமிஷத்துலேருந்து மீடியாவை நோக்கிதான் என் கனவு திரும்ப ஆரம்பிச்சது.

இன்ஜினீயரிங் முடிச்சதும் வேலைக்காக சென்னைக்கு வந்தேன். ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்துல வேலை கிடைச்சது. வேலை பார்த்துட்டே, விடுமுறை நாள்கள்ல எந்த யூடியூப் சேனல்ல வாய்ப்பு கிடைக்கும்னு தேடிப் போவேன். ஒருகட்டத்துல வேலை பார்த்துட்டே மீடியா கனவைத் துரத்துறது ரொம்ப கஷ்டம்னு புரிஞ்சது. அதனால வேலையை விட்டுட்டேன். கையில நிலையான வருமானம் இல்லை. வீட்டுலயும் கஷ்டம். ஆனாலும், ‘ஒருநாள் கண்டிப்பா மீடியாவுல ஓர் இடம் பிடிக்கணும்’ங்கிற நம்பிக்கையை மட்டும் விட்டுடலை’’ என்றபடி வாழ்க்கையை மாற்றிய அந்த வாய்ப்பைப் பற்றி பேசத் தொடங்குகிறார்.

‘தேநீர் இடைவேளை’ மூலமா நிறைய பேருக்கு என்னைத் தெரிய வந்தது. அதுக்கப்புறம் ஷார்ட் ஃபிலிம்கள்ல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. அந்த நேரத்துல என்கூட வேலை பார்த்த சதீஷை காதலிச்சுக் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்.

சில மாசங்களுக்கு முன்னாடி `ஜீ தமிழ்'ல ஒளிபரப்பாகுற ‘மகா நடிகை’ நிகழ்ச்சியில கலந்துகிட்டு தேர்வானேன். எட்டு சுற்று வரை முடிஞ்சுருக்கு. கறுப்பு வேஷம் போட்டு நான் பண்ணதைப் பார்த்த மக்கள் நிறைய பேர் வாழ்த்தினாங்க. பொதுவா பெண்கள் கருப்பசாமி வேஷம் போட மாட்டாங்க. மக்கள் அதை ஏத்துக்கிட்டது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நிகழ்ச்சிக்கு வந்திருந்த என் மாமியார், என் மகளை நினைச்சுப் பெருமைப்படுறேன்னு சொன்னாங்க. என் மாமியார், என் அம்மாவோட சந்தோஷத்தைக் காப் பாத்தணும். அதுதான் என் லட்சியம்...”

- வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் சுகந்திப்ரியா.