பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்கள்: சிங்கப்பூரில் புதிய பறிமுதல் மசோதா
சிங்கப்பூரில் இந்த மாதத்திலிருந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரியோ நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரியோ பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்களைக் கண்டுபிடித்தால் சக்கர பூட்டுகள் மூலம் அவற்றை பறிமுதல் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய வாகனங்கள் சாலையில் ஓட்டப்படுவதைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) தாக்கல் செய்யப்பட்டது.
நிலப் போக்குவரத்து, அது தொடர்பான விவகாரங்கள் மசோதா, பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்களை முறையான, சரியான நேரத்தில் அப்புறப்படுத்துவதை உறுதிசெய்வதற்காக நான்கு முக்கிய நடவடிக்கைகளை முன்வைக்கிறது.
பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டுவது சட்டவிரோதம் என்ற அதிகாரிகள், அவற்றுக்கு உரிய காப்பீடும் சாலையில் ஓட்டுவதற்கான பாதுகாப்பு இல்லாததால் ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அத்தகைய வாகனங்களை ஓட்டியோரில் சிலர் விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிருப்பதையும் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் அவர்கள் சுட்டினர்.
முன்மொழியப்பட்ட மசோதா, புதிய அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதிக் கட்டமைப்பை அமல்படுத்த வகைசெய்கிறது.
அந்தக் கட்டமைப்பின்கீழ் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற ஏற்றுமதியாளர்கள் மூலமாக மட்டுமே பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படவேண்டும்.
தற்போது, வாகன உரிமையாளர்கள் அத்தகைய வாகனங்களை ஏற்றுமதி செய்ய சொந்த ஏற்பாடுகளைச் செய்யலாம் அல்லது வாகன விற்பனையாளர் மூலமாக ஏற்றுமதி செய்யலாம்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதையும் விற்பனை செய்வதையும் முன்மொழியப்பட்ட மசோதா குற்றமாக வகைப்படுத்துகிறது.
அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் $20,000 வரை அபராதம், ஈராண்டுவரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.
அதே குற்றத்தை மீண்டும் புரிவோரின் தண்டனை இரட்டிப்பாகலாம்.
போக்குவரத்து துணையமைச்சர் பே யாம் கெங் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.