📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 17, 2026 10:33 PM

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? இபிஎஸ் கேள்வி

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? இபிஎஸ் கேள்வி

மதுரை: தமிழகத்திற்கு அதிக கடன் சுமை இருக்கும்போது புதிய தலைமைச்செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். மின்வெட்டு இல்லை என்று சொல்லிக் கொண்டே, மின்சாரத்துறை அமைச்சர், மின்பற்றாக்குறை இருப்பதாகவும் அதற்கு ஈடு செய்ய 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படும் என்கிறார். மின்வெட்டு இல்லைஎன்றால், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை என்ன. யதார்த்தமான நிலை தமிழகத்தில் மின்வெட்டு இருக்கிறது.இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்களின் தூக்கத்தை கெடுத்த அரசு தவெக அரசு.மாணவர்களின் படிப்பு கெடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தவெக அரசு இனியாவது விழித்துக் கொண்டு, மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்.

இந்த அரசு பதவியேற்றதும், புதிய அறிவிப்புகள் வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். தவெக அறிக்கையில், பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்த திட்டங்கள் வரவில்லை. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் வரவில்லை. மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளது.

தமிழகத்தில் கடன் அதிகரித்து விட்டது. தவெக அரசு பதவியேற்றது முதல்தற்போது வரை, எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அதில் 36 ஆயிரம் கோடி வருவாய் செலவு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இவ்வளவு கடன் இருக்கும்போது புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? நிதிநிலைமை சரி செய்த பிறகு தலைமைச் செயலகம் கட்டலாம்.அதற்கு மாறுபட்ட கருத்து கிடையாது.

அதுவும் புதிய தலைமை செயலகம் கட்டும் இடத்தை தேர்வு செய்யும்போது போது யாருக்கும் பாதிப்பு இல்லாத போக்குவரத்து நெரிசல் இல்லாத அனைவரும்வந்து செல்லக்கூடிய இடத்தில் புதிய தலைமை செயலகம் கட்டினால் பரவாயில்லை.ஆனால், மீனவர்கள் அதிகம் வசிக்கும், கடலோரமாக இருக்கும்பகுதி போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதி, மக்கள் அதிகம் பள்ளிகள் அதிகம் இருக்கும் போது குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நெருக்கடியான இடத்தில் தலைமை செயலகம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம். நிதி நிலைசரி செய்த பிறகு தான் தலைமை செயலகம் கட்டுவது சரியானது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டு விட்டது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல் நடக்காத நாட்களே இல்லை. இந்தளவு மோசமான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் இல்லை என முதல்வரும் அமைச்சரும் சொல்கின்றனர்.தவெக ஆட்சி வந்த பிறகு ஊழல் அதிகரித்து விட்டது.முதலில் கொடுத்ததை வாங்கிக் கொண்டு இருந்தனர். தற்போது, இவ்வளவு வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர். அந்தளவு ஊழல் நிறைந்த அரசாக தவெக அரசு உள்ளது. எந்த அலுவலகம் சென்றாலும் பணம் இல்லாமல் வேலை நடப்பது இல்லை.

ஆட்சிக்கு வந்த 4மாதங்களில் பல போராட்டங்கள் நடக்கிறது. விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். நர்சுகள், டாக்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பல போராட்டங்கள் நடக்கிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. 25 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய், புளி, காய்கறி விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழை,எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை சரி செய்யவில்லை. ஏதாவது பேட்டி மட்டுமே கொடுத்து வருகின்றனர்.

இடைத்தேர்தலில், விரைவில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவிக்கும்.அதிமுகவினர் வீட்டில் சோதனை நடத்தினால் ஒன்றும் கிடைக்காது. தவெகவினர் வீட்டில் சோதனை நடத்தினால் பணம் கிடைக்கும். அதிமுகவினர் வீட்டில் வறட்சி தான் நிலவுகிறது.

சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுகின்றனர். ஊழல் நடக்கும் போது முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் பிறக்கவில்லை. இரண்டு பேருமே பிறந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.அதில் சம்பந்தப்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.அந்தபிரச்னை பற்றி என்ன பிரயோஜனம். மக்களுக்கு என்ன கிடைக்கும். ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி சட்டசபையை காலத்தை கடத்த வேண்டும் என்பது தான் ஆட்சியின் நிலைப்பாடு.ஆக்கப்பூர்வமான தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நன்மை கிடைத்தால் பரவாயில்லை ஆனால், கிடைக்கவில்லை. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.