📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 08, 2026 03:33 AM

பழநி மடம் நில மோசடி வழக்கில் தலைமறைவான இடைத்தரகர் போலீஸில் சரண்

பழநி மடம் நில மோசடி வழக்கில் தலைமறைவான இடைத்தரகர் போலீஸில் சரண்

திண்டுக்கல்: பழநி மடம் நில மோசடி வழக்கில் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருந்த இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் இன்று இரவு திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரப் பகுதியில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்தது தொடர்பாக, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் இதுவரை ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் தலைமறைவானார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெயப்பிரகாஷ் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனு தள்ளுபடியானது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் ஜெயப்பிரகாஷை தேடி வந்தனர். மேலும், இவரது மனைவி செண்பகவதியிடம் கணவரின் இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தினர்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயப்பிரகாஷின் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். ஜெயப்பிரகாஷ் வெளிமாநிலத்துக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், போலீஸாரின் தீவிர விசாரணையை அடுத்து, ஜெயப்பிரகாஷ் இன்று இரவு திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் சரணடைந்தார். இவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.