ராகுல் சதம் வீணானது: வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி
புதிய சண்டிகர்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராகுல் சதம் வீணானது.
இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி, புதிய சண்டிகரில் (பஞ்சாப்) உள்ள மஹாராஜா யாதவிந்திரா சிங் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் 'பவுலிங் ஆல்-ரவுண்டர்' அன்ஷுல் கம்போஜ் அறிமுகமானார். 'டாஸ்' வென்ற கேப்டன் சுப்மன் கில், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ரோகித் 92 ரன்: இந்திய அணி துவக்கத்தில் திணறியது. ஜேடன் சீல்ஸ் ஓவரில் (3வது) சுப்மன் கில் (1), கோலி (0) அவுட்டாகினர். 3 ஓவரில் 4/2 ரன் எடுத்து தவித்தது. பின் அனுபவ ரோகித் சர்மா, ருதுராஜ் அசத்தினர். ரோகித் 58 பந்தில், ஒருநாள் அரங்கில் 63வது அரைசதம் எட்டினார். கீமோ பால் பந்தில் அவுட்டான ரோகித் (92 ரன், 10x4, 3x6) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ருதுராஜ், 57 ரன்னுக்கு (1x4, 4x6) வெளியேறினார்.
ராகுல் கலக்கல்: கடைசி கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தார் கே.எல்.ராகுல். நமன் திர், 30 ரன் எடுத்தார். நிதிஷ் குமார் (9), கம்போஜ் (17) நிலைக்கவில்லை. ஜேடன் சீல்ஸ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராகுல், ஒருநாள் அரங்கில் 9வது சதம் (80 பந்தில்) அடித்தார். கீமோ பால் வீசிய கடைசி ஓவரில் ராகுல் (6, 6, 4, 2, 2) அடித்து நொறுக்க, மொத்தம் 22 ரன் கிடைத்தன. இந்திய அணி 50 ஓவரில் 351/7 ரன் குவித்தது. ராகுல் (129 ரன், 10X4, 6X6), குர்னுார் பிரார் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஹோப் சதம்: கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப், அமிர் ஜங்கூ (67) கைகொடுத்தனர். ஹோப் சதம் அடித்தார். கீமோ பால் 44 ரன் எடுத்தார். கடைசி நேரத்தில் ஹோப், பவுண்டரி மழை பொழிந்தார். குர்னுார் ஓவரில் (47) 15, கம்போஜ் ஓவரில் (48) 22 ரன் விளாச, வெற்றி எளிதானது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவரில் 352/5 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ஹோப் (143 பந்தில் 162 ரன், 3X6, 17X4), குடகேஷ் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரோகித் 10,000 ரன்
ஒருநாள் அரங்கில் நேற்று துவக்க வீரராக, ரோகித் சர்மா 10,000 ரன்னை (202 இன்னிங்ஸ், 2026) அதிவேகமாக எட்டினார். சக ஜாம்பவான் சச்சினின் (214 இன்னிங்ஸ், 2004) 22 ஆண்டு கால சாதனையை தகர்த்தார். இம்மைல்கல்லை தொட்ட நான்காவது வீரரானார். முதல் மூன்று இடங்களில் சச்சின் (15310 ரன்), ஜெயசூர்யா (இலங்கை, 12740), கெய்ல் (வெ.இ., 10179) உள்ளனர்.
* சர்வதேச கிரிக்கெட்டில், வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 100 சிக்சர் அடித்த முதல் வீரரானார் ரோகித் சர்மா. ஒருநாள் போட்டியில் 47, டெஸ்டில் 14, 'டி-20'ல் 39 சிக்சர் அடித்துள்ளார்.
* ஒருநாள் போட்டியில், 5வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் (129*, 2026) 3வது இடம் பெற்றார். முதல் இரு இடங்களில் யுவராஜ் சிங் (139 ரன், எதிர், ஆஸி., 2004, சிட்னி), தோனி (134, எதிர், இங்கி., 2017, கட்டாக்) உள்ளனர்.