📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 16, 2026 04:33 PM

டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாடு

டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாடு

டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாடு - அமெரிக்காவுக்கு மாற்றாக உருவாகிறதா உலகின் புதிய அதிகார மையம்?

ஒருபுறம் சீனா. மறுபுறம் ரஷ்யா. மேற்கு ஆசியாவில் ஈரான். அதே பிராந்தியத்தில் UAE, சவூதி அரேபியா. லத்தீன் அமெரிக்காவில் பிரேசில். ஆப்பிரிக்காவின் பல நாடுகள். இவற்றை ஒரே மேடையில் இணைக்கும் பணியில் இந்தியா தனது ராஜதந்திரத் திறனை வெளிப்படுத்த வேண்டிய சூழல்.

இந்த முறை பிரிக்ஸ்-க்கு இந்தியா தலைமை வகித்தது. 2026 ஜனவரி 1-ம் தேதி தொடங்கிய இந்தியாவின் தலைமைப் பொறுப்பு, டிசம்பர் 31-ம் தேதி நிறைவடைகிறது. பிரிக்ஸ்-க்கு இந்தியா தலைமை வகிப்பது இது நான்காவது முறை. இதற்கு முன்பு 2012, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியா தலைமை வகித்திருக்கிறது.

சுழலும் இந்தத் தலைமைப் பொறுப்பு, வெறும் மாநாட்டை நடத்துவதற்கான அதிகாரத்தை மட்டுமே பெற்றதல்ல. அந்த ஆண்டின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பது, முக்கிய அமைச்சர்கள், பணிக்குழுக் கூட்டங்களை ஒருங்கிணைப்பது ஆகியவையும் தலைமை வகிக்கும் நாட்டின் பொறுப்பு. அதனால், டெல்லி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் பார்வையும், முன்னுரிமைகளும் இயல்பாகவே பிரதிபலித்தன.

‘மீள் தன்மை, புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்காகக் கட்டமைத்தல்’ என்பதே இந்தியா தேர்ந்தெடுத்த கருப்பொருள். ஆனால், இந்த நான்கு வார்த்தைகளுக்குப் பின்னால், உலக அரசியலின் பல பெரிய கேள்விகள் பதுங்கியிருந்தன.

இன்றைய BRICS-ன் பரந்துபட்ட தோற்றத்தைப் புரிந்துகொள்ள 2001-ம் ஆண்டுக்குச் செல்ல வேண்டும். அப்போது பிரித்தானியப் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’நீல், Goldman Sachs நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக இருந்தார்.

உலகின் எதிர்காலப் பொருளாதார சக்திகள் குறித்து அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில், Brazil, Russia, India, China ஆகிய நான்கு நாடுகளின் முதலெழுத்துகளை இணைத்து ‘BRIC’ என்ற சொல்லை உருவாக்கினார். 2050-ம் ஆண்டுக்குள், இந்த நான்கு நாடுகளும் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுக்கக்கூடும் என்பது அவரது கணிப்பு.

அப்போது அது ஒரு முதலீட்டு வங்கியின் பொருளாதார ஆய்வில் உருவான ஒரு சொல் மட்டுமே. ஆனால், அந்தச் சொல் அரசியல் வடிவம் பெற அதிக காலம் ஆகவில்லை. 2006-ல் BRIC நாடுகளுக்கு இடையே முறையான ஒத்துழைப்பு தொடங்கியது. 2010-ல் தென்னாப்பிரிக்கா இணைந்ததும் BRIC என்பது BRICS ஆனது.

அதன் பிறகு, பொருளாதாரத்தைத் தாண்டி அரசியல், வர்த்தகம், நிதி, சுகாதாரம், காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளிலும் இந்த அமைப்பு தனது தடத்தைப் பதிக்கத் தொடங்கியது.

இப்போது BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் என 11 நாடுகளைக் கொண்ட அமைப்பு.

இந்த நாடுகள் இணைந்து உலக மக்கள் தொகையில் சுமார் 49.5 சதவிகிதத்தையும், உலக GDP-யில் சுமார் 40 சதவிகிதத்தையும், உலக வர்த்தகத்தில் சுமார் 26 சதவிகிதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அதாவது, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் வாழும் நாடுகள் ஒரே மேடையில் சந்திக்கின்றன. இதோடு கதை முடியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் தலைநகர் டெல்லியில் 18-வது BRICS உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாளே பிரதமர் நரேந்திர மோடி பல முக்கியமான இரு தரப்பு சந்திப்புகளை நிகழ்த்தினார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் உட்பட எத்தியோப்பியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள். என முக்கியமான தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாநாட்டின் இரண்டாவது நாளிலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்புகள் தொடர்ந்தன. இவை வெறும் ‘மாநாட்டின் விளிம்பு சந்திப்புகள்’ என்று மட்டும் கடந்து செல்ல முடியாது. இந்தியா ஒரே நேரத்தில் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் உறவைப் பேண வேண்டும். அதே நேரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடனான தனது உறவையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இதுதான் இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவால்.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டிக்கும் வலுவான வார்த்தைகள் இடம்பெற வேண்டும் என்று ஈரான் விரும்பியது. அமெரிக்காவின் பிராந்திய செல்வாக்கைக் கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்பதும் ஈரானின் எதிர்பார்ப்பு.

ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் வேறு நிலைப்பாட்டிலிருந்தது. குறிப்பிட்ட நாடுகளை நேரடியாகக் குற்றம்சாட்டும் வாசகங்களை அது விரும்பவில்லை. அதற்குப் பதிலாக கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய இறையாண்மை, வளைகுடா கப்பல் போக்குவரத்து, உள்கட்டமைப்புப் பாதுகாப்பு ஆகியவை முக்கியத்துவம் பெற வேண்டும் என வலியுறுத்தியது. இங்கு தான், இந்தியாவின் ராஜதந்திர நகர்வு முக்கியத்துவம் பெற்றது.

கூட்டறிக்கையின் வார்த்தைகள் எளிதில் முடிவு செய்யப்பட்டுவிடவில்லை. இந்தியா தலைமையில் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. செப்டம்பர் 12-ம் தேதி அதிகாலை வரை பேச்சுவார்த்தை நீடித்ததாகக் கூறப்படுகிறது. கடைசியில், இரு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் ஒரு சமரச மொழி உருவானது. ‘யார் தாக்குதல் நடத்தினார்?’ என்ற கேள்விக்குப் பதிலாக, ‘நிலைமை மோசமடைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலை’ என்ற அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது.

நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும்... பொதுமக்கள், உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும்... பேச்சுவார்த்தை, தூதரக முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்... என்று பிரகடனம் வலியுறுத்தியது.

குறிப்பிட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாடுகளின் பெயர்களைச் சுட்டிக்காட்டாமல் இந்த சமரச மொழி உருவாக்கப்பட்டது. இதுதான் பல்வேறு கருத்துகளைக் கொண்ட 11 நாடுகளை ஒரே கூட்டறிக்கையில் கையெழுத்திடச் செய்த முக்கியமான ராஜதந்திர சமரசம்.

பயங்கரவாதம் தொடர்பான விஷயத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு பிரதிபலித்தது. எந்த வடிவிலான பயங்கரவாதத்துக்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகள் கூடாது என்றும் இந்தியா வலியுறுத்தியது. அதற்கு BRICS நாடுகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த ஆண்டு பிரகடனத்தில் உக்ரைன் போர் தொடர்பான குறிப்புகள் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ரஷ்யா BRICS-ன் முக்கிய உறுப்பினர். மேற்கத்திய நாடுகளுடன் ரஷ்யா கடுமையான மோதலில் இருக்கும் நிலையில், உக்ரைன் போர் குறித்து ஒருமித்த மொழியை உருவாக்குவது BRICS-க்கு எப்போதுமே சிக்கலான விஷயம். அதனால், இந்த ஆண்டு பிரகடனத்தில் அந்த விவகாரம் இடம்பெறாதது கவனத்தை ஈர்த்துள்ளது.

உலக நிர்வாக அமைப்புகளில் மாற்றம் வேண்டும் என்பது BRICS-ன் நீண்டகால கோரிக்கை. இந்த ஆண்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பில், குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விரிவான சீர்திருத்தம் தேவை என்று பிரகடனம் வலியுறுத்தியது.

உலக அரசியலில் இன்று இருக்கும் அதிகாரப் பங்கீடு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான அமைப்பையே பிரதிபலிக்கிறது. ஆனால், உலகம் மாறிவிட்டது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.

BRICS பற்றிப் பேசும்போது தவிர்க்க முடியாத ஒரு கேள்வி எழுகிறது. ‘BRICS நாடுகள் இணைந்து அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்கப் போகின்றனவா?’ என்பதுதான் அந்தக் கேள்வி. அது, தொடர்ந்து எழுப்பப்படும் கேள்வி. ஆனால், உடனடியாக புதிய BRICS நாணயம் உருவாக்குவது என்பது இந்த மாநாட்டின் முடிவு அல்ல.

அதற்குப் பதிலாக, உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது, எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்குவது போன்ற நடைமுறை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதன் பின்னணியில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற சில உறுப்பு நாடுகளின் நீண்டகால விருப்பம் இருப்பது மறுக்க முடியாதது. ஆனால், அந்தப் பாதை இன்னும் நீண்டது.

பிராந்திய அரசியல் எதிரிகளாக இருக்கும் நாடுகள்கூட ஒரே மேசையில் அமர்ந்திருக்கின்றன. இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை... ரஷ்யா – மேற்கத்திய நாடுகள் மோதல்... ஈரான் – அமெரிக்கப் பதற்றம்... மேற்கு ஆசியாவின் பல்வேறு பிராந்திய முரண்பாடுகள்... என BRICS-க்குள்ளேயே பல முரண்பாடுகள் உள்ளன.

எனவே, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ASEAN போல ஒரே மாதிரியான பொருளாதார வளர்ச்சிப் பாதையையும், ஒருங்கிணைந்த சந்தையையும் BRICS உருவாக்கும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. BRICS-ன் பலம் வேறு இடத்தில் இருக்கிறது.

வெவ்வேறு அரசியல், பொருளாதார நலன்களைக் கொண்ட நாடுகளை ஒரே மேசையில் அமர வைத்து, மேற்கத்திய உலகின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் சர்வதேச அமைப்புகளுக்கு மாற்றுக் குரலை உருவாக்குவதுதான் அதன் முக்கிய நோக்கமாக மாறி வருகிறது.

இதனால்தான் BRICS தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வெறும் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தும் வாய்ப்பு அல்ல. ‘Global South’ எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளின் குரலை ஒருங்கிணைக்கும் வாய்ப்பும்கூட.

டெல்லி மாநாடு முடிந்துவிட்டது. ஆனால், BRICS-ன் பயணம் முடியவில்லை. பொருளாதார ஒத்துழைப்பு... உள்ளூர் நாணயப் பரிவர்த்தனை... AI மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம்... சுகாதாரம்... காலநிலை மாற்றம்... உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு... ஐ.நா. சீர்திருத்தம்... என பல்வேறு தளங்களில் BRICS தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சி செய்கிறது.

அதே நேரத்தில், அதன் மிகப்பெரிய சோதனை, ‘பல்வேறு கருத்துகளைக் கொண்ட 11 நாடுகள் எவ்வளவு தூரம் ஒன்றாகப் பயணிக்க முடியும்?’ என்பதுதான். மேற்கு நாடுகளுக்கு மாற்றாக ஒரு புதிய உலக அமைப்பை உருவாக்க முடியுமா? அல்லது, மாறுபட்ட நலன்களைக் கொண்ட நாடுகள் அவ்வப்போது சந்தித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மேடையாக மட்டுமே BRICS தொடருமா?