📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 09, 2026 07:04 PM

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை

முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய டெல்லியின் முன்னாள் தலைமை செயலாளர் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1975-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராகேஷ் மேத்தா, தான் எடுத்த இந்த தீவிர முடிவுக்கு "மனநலம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள்" தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்த தற்கொலை குறிப்பு ஒன்றை நொய்டா போலீஸார் கைப்பற்றினர்.

முக்கிய திட்டங்களில் ராகேஷ் மேத்தா பங்கு:

செப்டம்பர் 6-ஆம் தேதி நொய்டாவின் செக்டார் 82-ல் உள்ள அவரது இல்லத்தில், அவர் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

74 வயதான மேத்தா, தீட்சித்தின் பதவிக்காலத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக டெல்லியின் தலைமை செயலாளராக பணியாற்றினார். இவரது பதவிக்காலத்தில் தான் 2010-இல் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

டெல்லி மாநகராட்சி ஆணையராக ராகேஷ் மேத்தா:

நகரின் முக்கிய போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிமை உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தியதில் மேத்தாவுக்கு முக்கிய பங்கு இருந்தது.

டெல்லி அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், டெல்லி மாநகராட்சியின் (MCD) ஆணையராகவும் பணியாற்றியதாக அவரது முன்னாள் சக ஊழியர்கள் தெரிவித்தனர். இவர் 2007-இல் தலைமை செயலாளராக பொறுப்பேற்று, 2010 நவம்பரில் ஓய்வு பெற்றார். திங்களன்று லோதி சாலை தகன மையத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.