📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 13, 2026 04:03 PM

டெஸ்ட் வரலாற்றிலேயே சிறந்த இடதுகை பந்துவீச்சாளராக மாறினார் ஸ்டார்க்.. கபில் தேவ் சாதனை சமன்

டெஸ்ட் வரலாற்றிலேயே சிறந்த இடதுகை பந்துவீச்சாளராக மாறினார் ஸ்டார்க்.. கபில் தேவ் சாதனை சமன்

டெஸ்ட் வரலாற்றிலேயே சிறந்த இடதுகை பந்துவீச்சாளராக மாறினார் ஸ்டார்க்.. கபில் தேவ் சாதனை சமன்

டார்வின்: ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். டார்வினில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், அவர் உலக டெஸ்ட் வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான இடதுகை பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை செய்துள்ளார்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத்துடன் ஸ்டார்க் சமநிலையில் இருந்தார். இந்த நிலையில், ஆட்டத்தின் 9-வது ஓவரில் வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் ஷாத்மன் இஸ்லாமின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஹெராத்தின் சாதனையை அவர் முறியடித்தார்.

மிட்செல் ஸ்டார்க் தற்போது தனது 106-வது டெஸ்ட் போட்டியில் 434 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கபில் தேவ் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இருவரும் தற்போது கூட்டாக 11-வது இடத்தில் உள்ளனர்.

இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஸ்டார்க் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துவிடுவார். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளுடன் 10-வது இடத்தில் உள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டார்க், ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என மூன்று விதமான ஐசிசி உலகக் கோப்பைகளையும் வென்று இருக்கிறார். ஆஸ்திரேலியா வென்ற 2015 மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை அணிகளில் அவர் முக்கிய அங்கமாக இருந்தார்.

குறிப்பாக 2015 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் 130 போட்டிகளில் விளையாடி 247 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் கவனம் செலுத்துவதற்காக, அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.