📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 12, 2026 01:04 PM

த.வெ.க.,வினர் மீதும் சிபிஐ வழக்கு உள்ளது: உதயநிதி குற்றச்சாட்டு

த.வெ.க.,வினர் மீதும் சிபிஐ வழக்கு உள்ளது: உதயநிதி குற்றச்சாட்டு

சென்னை: ''த.வெ.க.,வினர் மீதும் சி.பி.ஐ., வழக்கு மற்றும் வருமான வரித் துறை வழக்குகள் உள்ளன,'' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றஞ்சாட்டினார்.

த.வெ.க., - சுகுமார்: எங்களை பார்த்து 'கூலாக' உட்கார்ந்து இருப்பதாக, முன்னாள் அமைச்சர் கூறினார். எங்களுக்கு மடியில் கனமில்லை; அதனால், வழியில் பயமில்லை. ஐந்து ஆண்டுகள் கழித்து தேர்தலை சந்திக்கும்போதும் கூலாகவே இருப்போம்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: முன்னாள் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசும்போது, 'எங்களது ஆட்சியில் தினமும், 'டென்ஷனுடன்' இருந்தேன்' எனக் கூறினார். அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில் வழங்கினார்.

அவரும், 'இப்போது நாங்களும் துாங்க முடியவில்லை; நிமிடத்திற்கு நிமிடம் டென்ஷனுடன் இருக்கிறோம்' என்றார். உங்கள் மீதும் சி.பி.ஐ., வழக்கு இருக்கிறது; வருமான வரித் துறை வழக்கு உள்ளது.

அமைச்சர் ஆனந்த்: தொகுதி பிரச்னை தொடர்பாக முதல்வர் கேள்வி கேட்பார் என்பதற்காகவே, நாங்கள் டென்ஷன் ஆகிறோம். அந்த அர்த்தத்தில் தான் டென்ஷனாக இருக்கிறோம் என்று சொன்னேன். வேறு எந்த அர்த்தத்திலும் நான் அப்படி சொல்லவில்லை.

உதயநிதி: எங்கள் கட்சி உறுப்பினர் பன்னீர்செல்வமும் அதே அர்த்தத்தில் தான் பேசினார்.

தி.மு.க., - நேரு: த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுஉள்ளது. அதை விட, அதிக எண்ணிக்கையில் எதிர்வரிசையில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

ஆனால், நாங்கள் தனித்தனியாக இருக்கிறோம். எங்களிடம் இருந்தவர்கள் தான், உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எப்போதும் மக்கள் மனதில் இருப்பவர்.

அமைச்சர் செங்கோட்டையன்: 108 பெரியதா; உங்கள் எண்ணிக்கை பெரியதா என்பதை சின்ன குழந்தையை கேட்டால் கூட சொல்லும். 97 எம்.எல்.ஏ.,க்களை வைத்து ஆட்சி நடத்தியவர்கள் தி.மு.க.,வினர் என்பதை மறந்து விடக் கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.