தேக்கா சந்தை: புரட்டாசி விரதமும் இறைச்சி வணிகமும்
லிட்டில் இந்தியா மனமுருக வேண்டும்போது தேக்கா சந்தை காத்திருக்கிறது.
புரட்டாசி என்பது விரதம் மட்டுமன்று. அது பக்தியின் செயல் வடிவம். இம்மாதத்தில் பல இல்லங்களில் உணவுமுறை சைவத்திற்கு மாறுவதும், வழிபாடுகள் அதிகரிப்பதும், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஆன்மிக மரபு.
அவ்வகையில் இல்லங்கள் பக்தியில் திளைத்திருக்கும்போது தேக்கா சந்தை இறைச்சி, மீன் கடைகள் இளைப்பாறுகின்றன.
வழக்கமாக வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கும் இறைச்சி, மீன் கடைகள் தற்போது காற்று வாங்குகின்றன. வாங்க ஆளில்லாமல் மீன்கள் ஐஸ்கட்டிகளின்மேல் உறங்குகின்றன.
கொக்கிகளில் மாட்டி விற்பனைக்காக வைத்திருக்கும் ஆட்டிறைச்சிகளை சமைப்பதற்காக வாங்கிச்செல்ல அவ்வளவாக மக்கள் வரவில்லை.
“இது சமய விழாக்களின் காலம். எங்கள் வாடிக்கையாளர்களில் பலர் விரதத்தைக் கடைப்பிடிப்பதால் கூட்டம் குறைவாக உள்ளது. இதனை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம். இதுவும் நம் பண்பாட்டின் ஒரு பகுதிதான்,” என்று ‘ஹாஜி எம்.என் ஷாகுல் ஹமீத் மார்க்கெட்டிங்‘ கடையின் உரிமையாளர் நிஸாமுதீன் ராஜ் முஹம்மது, 46, கூறினார்.
“இதனால், முப்பது வெள்ளிக்கு விற்ற ஆட்டிறைச்சியின் விலை மாறிவிட்டது. வாடகை, மின்சாரம், தண்ணீர்க் கட்டணம் உள்ளிட்டவைகளும் சற்று அதிகரித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கு இயலாது.
“ஆயினும், நம் மக்களில் பலர் இக்காலக்கட்டத்தில் கடைப்பிடிக்கும் உணவுக் கட்டுப்பாடுகளை நாங்கள் மதிக்கிறோம். விரதம் முடிந்ததும் வணிகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்பது தெரியும். எனவே, முடிந்தவரை கடுமையாக உழைக்கிறோம்,” என்றார் திரு நிஸாமுதீன்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
தேக்கா சந்தையில் பல ஆண்டுகளாக மீன் விற்கும் ‘பிகே ஃபிஷ் சப்ளையர்’ கடை உரிமையாளர் திருவாட்டி உமா, 51, திருவிழாக் காலம் என்பதால் மீன் விற்பனை மந்தமாகிவிட்டதாகக் கூறினார்
வணிகம் ஏறத்தாழ பாதி குறைந்துவிட்டது. ஆயினும், இது ஒன்றும் புதிதன்று என்றார் அவர்.
“நூறு கிலோ மீன்கள் வாங்கி விற்பனை செய்யும் இடத்தில் தற்போது முப்பது கிலோ மட்டுமே வாங்கிவந்து விற்பனை செய்கிறோம். இது வழக்கந்தான். இது நாங்கள் இதுவரை பார்க்காத இழப்பன்று,” என்று தெளிவாகக் கூறினார் திருவாட்டி உமா.
"ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட பல செலவினங்களைச் சமாளிக்கும் வகையில் வருமானம் வந்தாலே போதுமானது. கடன்வாங்காமல் கைக்காசை வைத்துக்கொண்டே சமாளிக்கும் வகையில் விற்பனை நடைபெற்றால் அதுவே நிம்மதி,” என்றும் அவர் சொன்னார்.
"இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு, குறிப்பாக தீபாவளிக்குப் பிறகு விற்பனை சூடுபிடிக்கும்,” என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக இறைச்சி விற்பனைத் துறையில் அயராது பணிபுரிந்துவரும் திரு லிங்கசாமி, 67, தேக்காவில் இந்த ஆண்டு வணிகர்களுக்குச் சவால்கள் சற்று அதிகம் என்று தாம் கருதுவதாகச் சொன்னார்.
‘அலிஃப் மட்டன் ஸ்டால்’ ஊழியரான அவர், “தொழிலைத் தடையின்றி நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்துவருவது கவலையளிக்கிறது,” என்று கூறினார்.
“வார இறுதி நாள்களில் தேக்கா கடைகளில் நடமாட முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதும். ஆனால், தற்போது அப்படி இல்லை. தொழிலில் லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, கடை வாடகை, சம்பளம், பராமரிப்பு எனப் பல செலவுகளையும் சமாளித்தே ஆக வேண்டும். விற்பனைக்கு ஏற்றவகையில் அவற்றைச் கூட்டியோ குறைத்தோ ஈடுகட்ட முடியாது,” என்று அவர் கவலையுடன் கூறினார்.
“அதன் அடிப்படையில் வணிகங்கள் இவ்வாறான இக்கட்டுகளை எதிர்கொள்ளும்போது செலவுகளைச் சமாளிக்க சிறிதளவு சலுகை கிடைத்தாலும், சிறு வணிகர்களாகிய எங்களுக்குப் பேருதவியாக இருக்கும்,” என்றார் திரு சாமி.
சவால்களுக்கு நடுவே தளராத நம்பிக்கை
தேக்கா சந்தையில் சிறிய இடத்தில் பல்லாண்டுகளாக மீன் கடை நடத்திவருகிறார் திருவாட்டி டீன், 65.
சீனம், ஆங்கிலம் பேசும் மூத்த வணிகரான இவர், இந்துப் பண்டிகைகள், அவை கொண்டாடப்படும் மாதங்கள் பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.
மீன், நண்டு, இறால் என விற்பனை செய்யும் தமது கடைக்கு வரும் கணிசமான தமிழ் வாடிக்கையாளர்களை தீபாவளி வரை காணமுடியாது என்ற அவர், “முன்புபோல் இப்போது இல்லை. விற்பனை கிட்டத்தட்ட 30 விழுக்காட்டளவு சரிந்துவிட்டது,” என்றார்.
செலவு அதிகரிப்பைக் கருத்தில்கொண்டு தாம் கூடுதல் ஊழியரைப் பணியமர்த்தவில்லை என்ற அவர், “நவம்பர் தொடங்கி சில மாதங்களில் பல பண்டிகைகள் வரிசையாக வரும். எனவே, விற்பனை ஏறுமுகம் காணும். அதுவரை கையிருப்பில் உள்ள தொகையை வைத்து தொழிலை நடத்துகிறோம்,” என்றார்.
என்றாலும், இறைச்சிக் கடைகள் ஐப்பசியைக் காணும்வரை ஓய்வெடுக்கும்போது, அருகில் உள்ள காய்கறிக் கடைகள் பரபரப்பாக இயங்குவதையும் லிட்டில் இந்தியாவில் காணமுடிந்தது.
இது குறித்துப் பேசிய காய்கறிக் கடை ஊழியர் மணிகண்டன், 35, இக்காலக்கட்டதில் பூசணிக்காய், பரங்கிக்காய், வாழைக்காய் ஆகியவை அதிகம் விற்பனையாவதாகக் குறிப்பிட்டார்.
"வழக்கமாக விற்பனையாகும் காய்கள் என பல இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் மக்களின் மனங்கவர்ந்த காய் பூசணிக்காய். அதை அவர்கள் விருப்பத்துடன் வாங்குவர்,’’ என்று சிரித்தவாறே கூறினார் திரு மணி.
இல்லங்களில் வழிபாடுகள் இருந்தால் சிலர் முன்கூட்டியே சொல்லிவிடுவதுண்டு. அதனால், வழக்கத்தைவிட வாடிக்கையாளர்கள் சிலர் அதிக அளவில் பல காய்கறிகளை வாங்குவதும் உண்டு.
"பெரும்பாலும் சமையலுக்காக கத்தரிக்காய், முருங்கைக்காய் என ஒன்றிரண்டு காய்களை வாங்கிச் செல்வோர்கூட விழாக்காலத்தில் அவரைக்காய், வாழைக்காய், சேப்பங்கிழங்கு என குறைந்தது நான்கு காய்களை வாங்குவர். அதனால், இப்போதைக்கு காய்கறி விற்பனை அமோகம்,’’ என்றார் வணிகரான திரு செல்வம், 55.
இதற்கிடையே, திருவாட்டி செல்லம், 70, திருவாட்டி வள்ளி, 77, போன்ற வாடிக்கையாளர்கள், “விரதம் முடிந்ததும் மீண்டும் இதே கடைகளுக்குத்தான் வருவோம்,” என்றனர்.
“புரட்டாசி மாதம் முழுதும் நான் விரதம் இருந்தாலும் வீட்டில் பிள்ளைகளுக்காக வாரம் சிலமுறை அசைவம் சமைத்துக்கொடுப்பேன்,” என்று சொல்லிவிட்டு ஒரு கையில் காய்கறிப்பையுடன் இறைச்சிக்கடையை நோக்கிச் சென்றார் திருவாட்டி செல்வி, 62.
பல்லினச் சமூகத்தின் உணவுத் தேவைகளை ஆண்டாண்டுகாலமாக நிறைவேற்றிவரும் தேக்காவில் இந்தப் புரட்டாசி மாதத்தில் வணிகமும் பக்தியும் ஒன்றையொன்று ஆதரிக்கின்றன.
விரதத்தை முடித்துவிட்டுத் திரும்பும் தங்கள் வாடிக்கையாளர்களின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் தேக்கா நிலைய இறைச்சிக் கடைகள் காத்திருக்கின்றன.