தேமுதிகவ நான் சொல்லல... திருமாவளவன் திடீர் பல்டி
தேமுதிகவ நான் சொல்லல... திருமாவளவன் திடீர் பல்டி
கடலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, நேற்று கடலூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது ஆளும் கட்சியாக, ஆளுகின்ற கட்சிகளில் ஒன்றாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. அது சிலருக்கு வயிற்று எரிச்சலை உண்டாக்கி வருகிறது. தேமுதிக திடீரென உள்ளே வந்ததால், ஏற்கனவே திமுகவுடன் இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த உறவு பாதிக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்க முடியும் என்று சொன்ன கருத்தை, நான் தேமுதிகவை குறை சொன்னதுபோல பிரேமலதா புரிந்து கொண்டுள்ளார். வருகின்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழு ஆதரவு கொடுத்து பிரசாரம் செய்ய உள்ளோம்’’ என்றார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு அதிக இடங்கள் கொடுத்தது குறித்து பேசியிருந்த திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி தந்திருந்தார். எங்களை பார்த்து பயமா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், நான் தேமுதிகவை சொல்லவில்லை என்று திருமாவளவன் அந்தர் பல்டி அடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.