திருநெல்வேலி: குடிநீர் பிரச்சினையில் வாக்குவாதம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் பிரச்சனைக்காக நடந்த வாக்குவாதத்தில் ஊராட்சித் தலைவர் மகாராஜன் (55), செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் மகாராஜன். இவர் சுயேச்சையாக போட்டியிட்டு ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றவர்.
அங்குள்ள தாமரைகுளம் பகுதியில் மகாராஜன் நேற்று இரவு சென்றபோது, கண்ணநல்லூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லை என அப்பகுதியில் வசிக்கும் இசக்கி பாண்டியன் என்பவர் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அப்பகுதியில் கட்டுமானப் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து மகாராஜனை, இசக்கி பாண்டியன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த மகாராஜன், நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வள்ளியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.