தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் நாளை (25.09.2026) காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஞானேஷ் குமார்
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை சில முடிவுகள் மற்றும் உத்தரவுகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாக நாளிதழ் ஒன்றில் செய்திகள் வெளியாகியிருந்தன. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது, வாக்காளர் தரவுத்தளத்தை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., இன்று (வியாழக்கிழமை) சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் நாளை (25.09.2026) காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். வரும் திங்கட்கிழமை (28.09.2026) மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்
முன்னதாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், “தலைமைத் தேர்தல் ஆணையர் தவிர்த்து, தேர்தல் ஆணையத்தில் அங்கம் வகிக்கும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர்.
இது முற்றிலும் சட்டவிரோதமானது என இரண்டு ஆணையர்களும் எச்சரித்தபோதும், டெல்லியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவு தன்னிச்சையாக மென்பொருளைக் கட்டுப்படுத்தி, கள அதிகாரிகளான ERO-க்களின் அதிகாரத்தைப் பறித்து ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தையும் முறைகேடாகக் கையாள முற்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் முதல் கடமை
இந்த அத்துமீறலைத் தட்டிக்கேட்க தேர்தல் ஆணையர்களே மத்திய அமைச்சரவைச் செயலாளரிடம் முறையிடும் அளவுக்கு நிலைமை சீரழிந்துள்ளது. இந்த செயல்பாடுகள் RSS–BJP-யின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை உறுதி செய்வதோடு “Vote chori is a crime against the Indian people and a direct attack on our Constitution.”
“The BJP, RSS and EC who organised it have committed an act of treason. Justice will be served.” என்ற தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உண்மையான நாட்டுப்பற்றையும் மீண்டும் உலகிற்கு நிரூபித்து உள்ளது.
கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் இந்த பாசிச சதியைத் தோலுரித்து, ஜனநாயகத்தைக் காக்க திரு. ராகுல் காந்தி நடத்தும் மக்கள் சந்திப்புக்கள் முழு வீச்சில் தொடரும்” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார்.