📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 26, 2026 04:00 PM

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை

தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான முன்னுரிமை இடஒதுக்கீடு சட்டத் திருத்​த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு “தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்” கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

சட்ட திருத்த மசோதா

அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி டி.என்.பி.எஸ்.சி.மூலம் குரூப்-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையை பயன்படுத்த முடிகிறது. ஆனால் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20 சதவீத துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங் கப்படுவதில்லை.

இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களில், முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா கடந்த ஆட்சிக் காலத்தில், 23.1.2026 அன்று, தமிழக அரசு திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த முன்னுரிமையை ஒருமுறை பெற்றவர்கள், அதைவிட உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐகோர்ட் விசாரணை

ஆனால், அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

தமிழக அரசு சட்ட முன்வடிவு மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கவர்னர் ஒப்புதல்

1-ம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள்.

இதர மொழிகளைப் பயிற்று மொழியாக கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ்நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர். பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.

பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.

பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும்.