📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 12:01 PM

தமிழை போற்றும் மோடி; பிரிவினையை தூண்டும் ராகுல்!: பா.ஜ., கடும் குற்றச்சாட்டு

தமிழை போற்றும் மோடி; பிரிவினையை தூண்டும் ராகுல்!: பா.ஜ., கடும் குற்றச்சாட்டு

​புதுடில்லி: நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து, வடக்கு - தெற்கு இடையே பிளவை ஏற்படுத்த ராகுல் முயற்சிக்கிறார்' என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

​சென்னையில் சமீபத்தில் நடந்த மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய காங்., எம்.பி., ராகுல், மத்திய அரசு இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் வாயிலாக தமிழ் கலாசாரம், மொழி, வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது, என கூறியிருந்தார். ​ராகுலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., தரப்பில் இருந்து கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறியதாவது: ​ராகுலின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை. நாட்டின் ஒற்றுமையை நிலைநிறுத்த மோடி அரசு தொடர்ந்து பாடுபட்டு வரும் நிலையில், ராகுலோ எங்கு பார்த்தாலும் பிளவை உண்டாக்குவதிலேயே குறியாக இருக்கிறார். புனே முதல் சென்னை வரை இந்த பிரிவினைவாத அரசியல் அரங்கேற்றப்படுகிறது.

​பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் தமிழ் மொழிக்கும், கலாசாரத்திற்கும் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. ​ஐ.நா.,வில் 2019ல் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழின் தொன்மை மற்றும் சிறப்பைப் போற்றிப் பேசினார்.

​புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் தமிழ் கலாசாரத்தின் அடையாளமான புனித 'செங்கோல்' நிறுவப்பட்டது. ஆனால், அதை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. ​நெதர்லாந்தின் தி ஹேக்கில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீட்டு கொண்டுவரப்பட்டன.

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

​காசி தமிழ் சங்கமம் மற்றும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகிய விழாக்கள் மூலமாக வடக்கையும், தெற்கையும் இணைக்கும் கலாசாரப் பாலத்தை மோடி அரசு அமைத்துள்ளது. ​ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி திருக்குறளை பரிசளித்துக் கவுரவித்தார். உலகெங்கும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் மையம் சிங்கப்பூரில் தொடங்கப்பட உள்ளது. ஆனால் காங்கிரஸ் தன் ஆட்சிக் காலத்தில் இதை எப்போதும் செய்ததில்லை.

​மேலும், நாட்டின் பாதுகாப்பு வழித்தடங்களில் ஒன்று உத்தரபிரதேசத்திலும், மற்றொன்று தமிழகத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

​இப்படி தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு அதீத அக்கறை காட்டி வரும் வேளையில், வட இந்தியா - தென் இந்தியா இடையே மோதலை உருவாக்க நினைக்கும் ராகுலின் மலிவான பிரிவினைவாத நாடகம் ஒருபோதும் எடுபடாது. இவ்வாறு அவர் விளாசினார்.