📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 28, 2026 01:01 PM

தமிழக முதல்வர் விஜய் நடிகர் சங்க கட்டடத்தை திறந்து வைப்பார்

தமிழக முதல்வர் விஜய் நடிகர் சங்க கட்டடத்தை திறந்து வைப்பார்

தமிழக முதல்வர் விஜய் நடிகர் சங்க கட்டடத்தை திறந்து வைப்பார் - நடிகர் நாசர் உறுதி

நடிகர் ரஜினிகாந்த் 50 வருட சினிமா வாழ்க்கைக்கு பாராட்டு விழா நடத்துவதில் அவருக்கு உடன்பாடு இல்லை என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

Published : September 28, 2026 at 9:59 AM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யால் நடிகர் சங்க புதிய கட்டடம் வெகு விரைவில் திறக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘புருஷன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள், நடிகர் சங்க கட்டட நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும் மூத்த நடிகை லதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சங்க தலைவர் நாசர் பேசுகையில், “முதலில் நம்மில் ஒருவராக இருந்து இப்போது முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசிய ஒன்பது நபர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களும் போலீசில் புகார் கொடுக்க வேண்டும். அது சட்ட நடவடிக்கைகளுக்கு வலுவாக இருக்கும்.

நடிகர் சங்க புது கட்டடம் இரண்டு மாதங்களில் திறக்கப்படும். அதற்கான சட்டத் திருத்தங்கள் குறித்து விவாதிக்க சிறப்பு பொதுக்குழு கூட்டப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யால் நடிகர் சங்க புதிய கட்டடம் வெகு விரைவில் திறக்கப்படும். அது ஒரு வரலாறாக அமையும்” என்று குறிப்பிட்டார்.

பொருளாளரும், நடிகருகான கார்த்தி பேசுகையில், “நடிகர் சங்க புது கட்டட பணிகள் இன்னும் 45 நாட்களில் நிறைவடையும். ஒரு மாதம் டெஸ்ட் வேலைகள் நடக்கும். டிசம்பர் மாத தொடக்கத்திற்குள் புதிய கட்டடம் திறக்க ஏற்பாடுகள் நடக்கின்றன" என்றார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் நாசர், கார்த்திக், கருணாஸ், பூச்சி முருகன், ஆகியோர் கூட்டாக கலந்து கொண்டனர்.

அப்போது கட்டடம் திறந்ததற்கு பிறகு தான் கல்யாணம் செய்து கொள்வேன் என நடிகர் விஷால் கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நாசர் பதிலளித்தார். “அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து வருகிறார். கடந்த முறை முதலமைச்சரை நேரில் சந்திக்கும் போது கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு வாய்மொழியாக அனுமதி கேட்டோம். அவர் கண்டிப்பாக வந்து கலந்து கொள்கிறேன் என இன்முகத்துடன் தெரிவித்தார். நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழாவிற்கு இரண்டு, மூன்று தேதிகள் தேர்வு செய்து முதலமைச்சரிடம் நேரில் சென்று தெரிவிப்போம்” என்றார்.

நடிகர்கள், நடிகைகள் சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “சிலர் எங்களது நடிகர், நடிகைகளைப் குறித்து தவறாக பேசுகின்றனர். நாங்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறோம். அதன்பேரில் கிட்டத்தட்ட 9 நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்துள்ளோம்.

இன்று இதுபோன்று, பிரபலமானவர்களைப் பற்றி பேசித்தான் நிறைய பேர் பிழைத்து வருகின்றனர். யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இழிவாக பேசுகின்றனர். ஏனென்றால் அதிலிருந்து ஏதோ பணம் வருகிறது. அதற்காக இவ்வளவு தரம் தாழ்ந்து போவது தவறு” என தெரிவித்தார்.

மேலும் பேசிய நடிகர் நாசர், “சில பிரபல நடிகர்கள் தற்போது வெளியூர்களில் படப்பிடிப்பில் உள்ளதால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என என்னிடம் கடிதம் வழங்கியுள்ளனர். மேலும் பல நடிகர்கள் நிதி வழங்கியுள்ளனர். தனுஷ், முதலமைச்சர் விஜய் என பலர் நிதி கொடுத்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளதோடு, கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இங்கு கட்சி வேறுபாடெல்லாம் கிடையாது. நடிகர் சங்க கட்டடம் திறக்கும்போது அனைத்து நடிகர்களும் ஒன்றாக இருப்பார்கள்” என கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் 50 வருட சினிமா வாழ்க்கைக்கு பாராட்டு விழா உள்ளதா என்ற கேள்விக்கு, “இல்லை, தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நாங்கள் அனைவரும் பேசினோம். ஆனால் அவருக்கு அதில் உடன்பாடில்லை. அவருக்கு செய்வது எங்களுக்கு பெருமை தான். ஆனால் அவர் உடன்பட வேண்டும்” என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் நடிகை குஷ்பு பேசுகையில், ''நடிகர் சங்கம் என்பது நமது குடும்பம் போன்றது. சங்கம் என்று சொன்னால் சங்கமம். இந்த சங்கத்தில் ஒவ்வொருவர் மீதான அன்பும், ஒற்றுமையும் எப்போதும் நீடிக்க வேண்டும். என்ன பிரச்சினை இருந்தாலும் அதை ஒன்றாக இணைந்து சரிசெய்யும் சக்தி நம்மிடம் உண்டு. பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், சங்கத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது என்னுடைய குடும்பம். இதற்காக மாபெரும் கட்டடம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். திறப்பு விழாவில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என கூறினார்.

தொடர்ந்து நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “எழுபதாவது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற நடிகர் சங்கத்தை பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. மிகவும் அருமையாக கட்டியுள்ளனர் கூடிய விரைவில் திறக்கப்படும்” என கூறினார்.