📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 18, 2026 01:33 PM

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்... நேற்று ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்... நேற்று ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. வெயில் மற்றும் மழை என காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக டெங்கு பாதிப்பு உள்ளது.

குறிப்பாக தினசரி, 70 முதல் 100 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,577ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு காய்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொசு ஒழிப்பு பணியில் 25,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் மருந்தகங்களுக்குச் சென்று தாங்களாகவே மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்து. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.