📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 19, 2026 07:33 PM

தமிழ்நாட்டில் சட்டம்

தமிழ்நாட்டில் சட்டம்

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் கொடூர கொலை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து 8 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையின் புறநகர் பகுதிகள் தொடங்கி கன்னியாகுமரி வரை நேற்று ஒரே நாளில் கள்ளக்காதல், குடிபோதையில் தகராறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதனபடி, சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 9-ம் தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை காவல்துறையினர் மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே வாலிபர் ஒருவரின் தலையில் கல்லை போட்டுக் கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தப்பி சென்ற 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மதுபான கடையில், மaது குடித்துவிட்டு காலி பாட்டிலை கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பள்ளி ஒன்றின் அருகே, இளைஞர் ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வாலிபர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்த மர்ம நபர்கள், அவரது சடலத்தை அங்குள்ள குளத்தில் வீசி சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சுமார் 2 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்த வாலிபரின் சடலத்தை மீட்டனர்.

இந்த 5 சம்பவங்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் வேறு சில இடங்களிலும் நடந்த கொலைகளையும் சேர்த்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக அரங்கேறும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க, காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.