📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 01:02 PM

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு

இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று நம்புவதாக திமுக சார்பில் கோவிச்செழியன் தெரிவித்தார்.

Published : August 10, 2026 at 11:38 AM IST

சென்னை: அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தரப்பில் பேசிய உறுப்பினர் கோவிச்செழியன், “முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்த தனித் தீர்மானத்தை திமுக சார்பில் நான் வழிமொழிகிறேன்.

தமிழர் என்ற உணர்வு, தமிழ் என்ற மொழி, தமிழ்நாடு என்ற அடையாளம் இவை அனைத்தும் நம்முடைய பொதுவான பெருமை. 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற அரசாணையை அன்றைய அரசு கொண்டு வந்தது. அதனை முறையாக நடைமுறைப்படுத்தியதும் திமுக அரசுதான்.

அதுமட்டுமின்றி, தமிழ் மொழியின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த இயக்கம் திமுக. தமிழ்மொழிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடியவர் முத்தமிழறிஞர் கலைஞர். எனவே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் குறித்த இந்த தனித் தீர்மானத்தை திமுக சார்பில் முழுமையாக ஆதரிக்கிறேன்.

அதேபோல, உலகத்திற்கே தமிழின் பெருமையை எடுத்துச் சொன்னது திமுக. சென்னையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை கொண்டு வந்து, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் பல்வேறு பணிகளை செய்தது.

ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட வேதனைக்குரிய நிகழ்வு ஏற்பட்டது. அதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய சூழலில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் இன்றைக்கு தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று நம்புகிறோம்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்று தந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைக் கொண்டு வந்தது கலைஞர் தலைமையிலான திமுக. அதை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக. தொடர் ஓட்டமாக இதனை எடுத்துச் சென்று, தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்ட பெருமையும் திமுகவிற்கே உண்டு” என பேசினார்.

தொடர்ந்து அதிமுக சார்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்த அரசின் தனித் தீர்மானத்தை முழு மனதோடு ஆதரிக்கிறேன்.

தமிழ்மொழியின் பெருமையையும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தையும் போற்றும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு, தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் பாடல் அல்ல. அது தமிழ்மொழியின் தொன்மையையும், பெருமையையும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தையும் வெளிப்படுத்துகின்றது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை உணர்வால் ஒருங்கிணைக்கும் ஒரு அடையாளமாகவும் அது திகழ்கிறது.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் மற்றும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் அதிமுக வரலாற்றுச் சிறப்புமிக்க பல பணிகளைச் செய்துள்ளது.

உலகத் தமிழ் மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது. இதன்மூலம் தமிழின் பெருமை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தமிழ்மொழி தொடர்பான ஆய்வுகள், கருத்தரங்குகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டன. தமிழர்களின் வரலாறும், பண்பாடும் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது எந்த மொழிக்கும், எந்த இனத்திற்கும், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. தமிழர்கள் தங்களுடைய தாய்மொழிக்கு செலுத்தும் மரியாதையும் வணக்கமும்தான் தமிழ்த்தாய் வாழ்த்து.

நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்கிறோமோ, அதே அளவிற்கு நாம் தமிழர்கள் என்பதிலும் பெருமை கொள்கிறோம். இந்திய தன்மையும், தமிழர் அடையாளமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.

அரசியல் களத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் தமிழர்கள். தமிழ்மொழியின் உரிமை, வளர்ச்சி மற்றும் பெருமை என்று வரும்போது, இந்த பேரவை ஒரே குரலில் நிற்க வேண்டும்.

அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என்ற இந்த அரசின் தனித் தீர்மானத்தை முழு மனதோடு ஆதரிக்கிறேன்” என்றார்.