``தங்க மோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி முறைகேடு..?’’ புகார் எழுப்பும் அ.தி.மு.க!
``தங்க மோதிரம் திட்டத்தில் ரூ.136 கோடி முறைகேடு..?’’ புகார் எழுப்பும் அ.தி.மு.க!
மோதிரங்கள் தயாரிப்புக்கான டெண்டரில் நிறுவனங்கள் குறிப்பிட்ட குறைவான விலைப் புள்ளிகள் நம்பும்படியாக இல்லை;
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் திட்டம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், அதற்கான டெண்டர் ஒதுக்கீடு, நிதிக் கணக்குகளின் பின்னால் ரூ.136 கோடி மறைக்கப்பட்டிருப்பதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.
த.வெ.க-வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றான, பிறக்கும் குழந்தைகளுக்கு, `ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய், கடந்த 28-ம் தேதி மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தொடங்கிவைத்தார். இதற்கான மோதிரத்தைத் தயாரித்து வழங்கும் டெண்டரில் 11 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், தங்கம் நீங்கலான பணிகளுக்கு 0.1 பைசா குறைந்த விலைப்புள்ளி கோரிய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 70%, L-9 இடத்தில் இருந்த கல்யாண் நிறுவனத்துக்கு 30% டெண்டர் ஒதுக்கப்பட்டது.
உடனே, “ஒரு பைசா செலவில் எப்படி மோதிரம் வழங்க முடியும்?” என டெண்டர் குறித்து எதிர்க்கட்சிகளும், சமூக ஊடகத்தினரும் கேள்வி எழுப்பின. அரசு மேலோட்டமாக விளக்கம் அளித்த நிலையில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், “இந்தத் திட்டத்தில் பங்கேற்பது பெருமை; தமிழக மக்களுக்குச் சேவை செய்ய இது ஒரு நல்வாய்ப்பு” எனத் தெரிவித்தது. இந்த நிலையில்தான், இந்தத் திட்டத்தில் ரூ.136 கோடிக்குக் குளறுபடிகள் நடந்திருப்பதாக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
“ரூ.618 கோடி மதிப்பு... ரூ.755 கோடி ஒதுக்கீடு!”
இது குறித்து கோவை சத்யனிடம் பேசிய போது, “த.வெ.க அரசு தங்க மோதிரம், சங்கிலி, கொலுசு என எது வேண்டுமானாலும் வழங்கட்டும்; அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், திட்டம் முறையாகவும் நியாயமாகவும் செயல்படுத்தப்படுகிறதா என்பதே கேள்வி. பட்ஜெட்டில் 4,41,867 பயனாளிகள் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், வழங்கப்பட்ட மோதிரங்களின் இன்றைய மதிப்பு ரூ.618.34 கோடி. ஆனால், திட்டத்துக்கு ரூ.755 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரூ.136 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் த.வெ.க அரசு முதற்கட்டமாக ரூ.136 கோடியை அடித்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
1-க்கு அடுத்து 2-ம் இடத்தில் உள்ளவரைத் தேர்வுசெய்யாமல், 9-ம் இடத்திலுள்ள நிறுவனத்தைத் தேர்வு செய்தது ஏன்... இதை யார் முடிவுசெய்தார்கள்... 9-ம் இடத்தில் உள்ள நிறுவனம், முதல் இடத்தில் இருந்த நிறுவனம்போல 0.1 பைசாவுக்கு டெண்டர் பணியைச் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறதா... இது குறித்து அரசுத் தரப்பில் வெளிப்படையான அறிவிப்பு இல்லை. ஒரு பைசாவுக்கு டெண்டர் எடுத்து லாபம் தேவையில்லை என்பதுபோல் பேசும் நிறுவனங்களும், தாராள மனதுடன் அதைச் செய்ததாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்... பல ஆயிரம் கோடிக்கு தொழில் செய்தாலும், ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.15 கோடி வரைதான் சி.எஸ்.ஆர் நிதியை விடுவிக்கின்றன. அப்படியிருக்க, அந்த நிறுவனம் எப்படி லாபமின்றி ஒரு பைசாவுக்கு மோதிரம் செய்து கொடுக்கும்... இப்படிச் சந்தேகக் கேள்விகள் பல இருக்கின்றன.
“முதல்வருக்குத் தெரியுமா?”
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இந்தத் திட்டத்தில் டெண்டர் எடுத்த நிறுவனத்தின் பின்னணி, லாப நோக்கம், அரசு வழங்கும் தொகை, தங்கத்தின் விலை உள்ளிட்ட விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் வரவு, செலவை சி.ஏ.ஜி தணிக்கை செய்யும்போது, இந்தத் திட்டத்தில் நடந்த குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வரும்.
உயிர் காக்கும் மருந்துகளைக் கொள்முதல் செய்யவேண்டிய மருத்துவத்துறை, தங்க மோதிரம் கொள்முதல் செய்வது கொடுமையானது. அ.தி.மு.க ஆட்சியில் தாலிக்குத் தங்கம் திட்டம் வெளிப்படையாக நடந்தது. ஆனால், தற்போது நடப்பது முதல்வருக்குத் தெரியுமா அல்லது வேறு யாரும் லாபம் பார்க்கிறார்களா... இதற்கு அரசு, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.
குற்றச்சாட்டு குறித்து த.வெ.க-வின் துணைப் பொதுச்செயலாளர் வைகைச்செல்வனிடம் கேட்டதற்கு, “முதல்வர் விஜய்யின் மக்கள் நலத் திட்டங்களால் அவர் செல்வாக்கு அதிகரிக்கிறது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல் சிலர் எதையாவது சொல்கிறார்கள். அந்தக் கட்சியில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகச் சிலர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது கத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கே நாங்கள் பதில் சொல்வதில்லை. அப்படியிருக்கும் நிலையில் இவரையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை” என்றார்.
தங்கம் ஒளிரும் திட்டத்தில் இருட்டும் உண்டோ?