தன்னம்பிக்கையுடன் தமிழ்ப் பேச வழிகாட்டிய பட்டறை
சிங்கப்பூரில் உள்ள குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியின் அறிவார்ந்த வளாகத்தில் ஒலி 96.8 வானொலி நிலையத்தின் தொகுப்பாளர்களான ஹலிமா அஸ்மான், அப்துல் காதர் ஆகியோர் தமிழ் மொழிப் பட்டறை ஒன்றை நடத்தினர்.
செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த அந்நிகழ்வில் அப்பள்ளியைச் சேர்ந்த ஏறத்தாழ 60 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
திருவாட்டி ஹலிமாவும் திரு காதரும் மாணவர்களுடன் கலந்துரையாடி, தமிழ் மொழியில் தன்னம்பிக்கையுடன் பேசுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மாணவர்களின் ஆர்வத்தையும் பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான செயல்பாடுகள், உரையாடல்கள், ஈடுபாட்டுடன் கூடிய நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.
மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு, வானொலித் தொகுப்பாளர்களுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றனர். தமிழை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கும், தமிழில் தன்னம்பிக்கையையுடன் மாணவர்கள் பேசுவதற்கும் இப்பட்டறை சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இத்தகைய நிகழ்ச்சிகள் இளம் தலைமுறையினரிடையே தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு, தமிழின் மீதான ஆர்வத்தையும் வளர்க்க உதவுகின்றன.
தகவல்: குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளி