📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 23, 2026 12:03 PM

டி20 போட்டி போல் டெஸ்ட் கிரிக்கெட் எளிதாக இருக்காது..வைபவ் சூர்யவன்ஷிக்கு அவரது பயிற்சியாளர் அறிவுரை

டி20 போட்டி போல் டெஸ்ட் கிரிக்கெட் எளிதாக இருக்காது..வைபவ் சூர்யவன்ஷிக்கு அவரது பயிற்சியாளர் அறிவுரை

டி20 போட்டி போல் டெஸ்ட் கிரிக்கெட் எளிதாக இருக்காது..வைபவ் சூர்யவன்ஷிக்கு அவரது பயிற்சியாளர் அறிவுரை

மும்பை: இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி எளிதாக நுழைந்தது போல, டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்று அவரது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா எச்சரித்துள்ளார். இருப்பினும், சிகப்பு பந்து கிரிக்கெட்டிலும் தம்மால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை சூர்யவன்ஷி உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

துலீப் டிராபி 2026 தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து ரெட்-பால் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 15 வயதே ஆன இந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன், ஐபிஎல் மூலம் மிகக்குறுகிய காலத்தில் வளர்ந்து, கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார்.

ஆனால், இதுவரை அவர் விளையாடியுள்ள ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில், 12 இன்னிங்ஸ்களில் வெறும் 17.25 சராசரியுடன் 207 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதேசமயம், ஆஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்டோருக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை அவர் அடித்துள்ளார்.

"அவர் செய்ய வேண்டிய மிகப்பெரிய மாற்றம் மனரீதியானது தான்" என்று மனிஷ் ஓஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "வெள்ளை பந்து கிரிக்கெட்டில், சூர்யவன்ஷி ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக அடிக்க முயல்கிறார். ஆனால், புதிய சிகப்பு பந்துக்கு எதிராக அத்தகைய அணுகுமுறை உதவாது. சரியான பந்துகளுக்காக பொறுமையாகக் காத்திருந்து, விக்கெட் இழக்கும் அபாயத்தைக் குறைக்க வேண்டும்.

"இன்னிங்ஸை எவ்வாறு கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அவரால் 300 பந்துகளை எதிர்கொண்டு விளையாட முடியும் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு முன்னதாக அவர் இந்த அனுபவத்தைப் பெற வேண்டியது அவசியம்" என்று ஓஜா கூறினார்.

"அவருக்கு இப்போது 15 வயது தான் ஆகிறது, எனவே அவர் முதிர்ச்சியடைய இன்னும் கால அவகாசம் தேவை. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பது எளிதானது அல்ல. தற்காலத்தில் வீரர்கள் அதிக அளவில் டி20 போட்டிகளில் விளையாடுகிறார்கள். ஆனால், துலீப் மற்றும் ரஞ்சிக் கோப்பை போன்ற தொடர்களில் ஒரு சீசனுக்கு 7 முதல் 10 போட்டிகள் மட்டுமே ஒரு வீரருக்கு கிடைக்கக்கூடும்."

"அந்தப் போட்டிகளில் தொடர்ந்து சதங்களும், இரட்டைச் சதங்களும் விளாசினால் மட்டுமே தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்க முடியும். அதையும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் செய்ய வேண்டும். இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதற்கு அவருக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பொறுமை தேவை" என்று ஓஜா விளக்கியுள்ளார்.

இருப்பினும், சூர்யவன்ஷியின் திறமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ள ஓஜா, அவர் சிகப்பு பந்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார் என்றும், இந்த சவாலை அவர் வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார். துலீப் கோப்பை ஞாயிற்றுகிழமை முதல் தொடங்குகிறது. இதில் ஈஸ்ட் சோன் அணி, நார்த் ஈஸ்ட் சோன் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.