உலக சாம்பியனை வீழ்த்தி அமன் ஷெராவத் வரலாறு.. 57 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!
உலக சாம்பியனை வீழ்த்தி அமன் ஷெராவத் வரலாறு.. 57 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!
நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த இறுதிப்போட்டியில், இந்திய நட்சத்திர வீரர் அமன் ஷெராவத், உலக சாம்பியனான வடகொரிய வீரரை 11-7 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கான பரபரப்பான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் அமன் ஷெராவத் வடகொரியாவின் உலக சாம்பியன் ஹான் சாங் சாங்கை எதிர்கொண்டார். தொடக்க சுற்றில் அசாத்திய தற்காப்புடன் ஆடிய அமன், முதல் புள்ளிகளை எடுத்து 2-0 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து தனது ஆக்ரோஷமான பிடிகளால் புள்ளிகளை குவித்து மளமளவென 6-1 என வலுவான நிலைக்கு சென்றார்.
போட்டியின் நடுவே வடகொரிய வீரருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் களமிறங்கிய அவர் ஆக்ரோஷமாக தாக்கி அமனை அடுத்தடுத்து கீழே சாய்த்து 7-6 என முன்னிலை பெற்று அதிர்ச்சி அளித்தார்.
ஆட்டம் முடிய 2 நிமிடங்களுக்கும் குறைவாக இருந்த நிலையில், வடகொரிய வீரர் முன்னிலை பெற்றது போட்டியில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. தோல்வியின் விளிம்பில் நின்ற அமன் ஷெராவத், கடைசி ஒரு நிமிடத்தில் தனது முழு பலத்தையும் திரட்டி சீறிப்பாய்ந்தார். எதிராளியின் காலை லாவகமாக பிடித்து அவரை தரையில் புரட்டிப் போட்டு அடுத்தடுத்து புள்ளிகளை வாரிக்குவித்தார். 6-7 என பின் தங்கியிருந்த நிலையை மாற்றி, சாதுரியமாக விளையாடி 11-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தொடரில் ஜப்பான் வீரர் யமடோ ஒகாவாவை 20-0 எனவும், கஜகஸ்தான் வீரரை 12-1 எனவும் வீழ்த்திய அமன், அரையிறுதியில் தஜிகிஸ்தான் வீரருக்கு எதிராக 14-8 என அசாத்திய கம்பேக் கொடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
கடந்த 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்த அமன் ஷெராவத், இம்முறை தங்கப் பதக்கத்தை வசப்படுத்தி புதிய சகாப்தம் படைத்துள்ளார். நேற்று சுஜித் கல்கல் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, இன்று அமன் ஷெராவத்தும் தங்கம் வென்றுள்ளதன் மூலம், நடப்பு ஆசிய விளையாட்டு மல்யுத்த களத்தில் இந்திய அணி தனது அசைக்க முடியாத பலத்தை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளது.