📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 28, 2026 03:04 AM

உலகப்புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வாவின் விலை கிடுகிடுவென உயர்வு

உலகப்புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வாவின் விலை கிடுகிடுவென உயர்வு

உலகப்புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வாவின் விலை கிடுகிடுவென உயர்வு - அல்வா பிரியர்கள் கடும் அதிர்ச்சி

திருநெல்வேலியின் அடையாளமாகக் கருதப்படுவதால் விலை உயர்வு அமலுக்கு வந்தபோதிலும் இன்றும் வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இருட்டுக்கடையில் அல்வா வாங்கிச் செல்கின்றனர்.

Published : August 27, 2026 at 8:04 PM IST

திருநெல்வேலி: உலகப்புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வாவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் அல்வா பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒரு கிலோ சர்க்கரை சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ சர்க்கரை நகரங்களுக்கு ஏற்றாற்போல் ரூ.75 வரை உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் முதல் ஸ்வீட்ஸ் கடைகளின் உரிமையாளர்கள் வரை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

சர்க்கரை விலை ஏற்றதால் இனிப்பு பலகாரங்களின் விலையை உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள பேக்கரிகள், ஸ்வீட்ஸ் கடைகளில் ஜிலேபி, மைசூர் பாகு, அல்வா, பால்கோவா போன்றவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், உலகப்புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடையில் அல்வாவின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது, அல்வா பிரியர்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று வரை ஒரு கிலோ அல்வா ரூ.440- க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஆக.27) ஒரே நாளில் அல்வா கிலோவுக்கு ரூ.80 வரை அதிகரிக்கப்பட்டு ரூ.520- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இருட்டுக்கடையின் நிர்வாகிகளை நாம் தொடர்புக் கொண்டு கேட்டபோது, "சர்க்கரை மட்டுமல்லாமல், மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.

அதேபோல், திருநெல்வேலி மாநகரில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ், லட்சுமி விலாஸ், சந்திரா விலாஸ் உள்ளிட்ட பிரபல அல்வா கடைகளிலும் அல்வா கிலோவுக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ அல்வா ரூ.320- க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.340- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் மற்ற இனிப்பு வகைகளின் விலையும், கார வகைகளின் விலையும் கிலோவுக்கு ரூ.20 அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்த மாதங்களில் வரவுள்ள நிலையில் பலகாரங்களின் விலையேற்றம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலகாரங்களின் விலை அதிகரித்தாலும், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் தங்களுக்கு பிடித்தமான இனிப்புகள் மற்றும் கார வகைகளை வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருட்டுக்கடைக்கு அணிவகுக்கும் வாடிக்கையாளர்கள்

புகழ்பெற்ற அல்வா என்பதாலும், திருநெல்வேலியின் அடையாளமாகக் கருதப்படுவதாலும் விலை உயர்வு அமலுக்கு வந்தபோதிலும் இன்றும் வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இருட்டுக்கடையில் அல்வா வாங்கிச் சென்றனர். குறிப்பாக, சென்னை, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போர் அதிகளவில் இருட்டுக்கடைக்கு வந்து அல்வா வாங்கி செல்கின்றனர். விலை உயர்ந்த போதிலும் பாரம்பரிய சுவை கொண்ட தின்பண்டம் என்பதால் அல்வாவை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.