வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் கூட்டம்
வாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் கூட்டம் இந்த அமைப்பின் 108 ஆவது மாதாந்திர நிகழ்ச்சி நேற்று 11-10-2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு சிங்கப்பூர் பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்றது. 'மூப்பில்லா முதல்மொழியே' என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது. அமைப்பின் உறுப்பினர் மோகனபிரியா ராமலிங்கம் மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலில் இளைப்பாற நேரில் மற்றும் இணையம் வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார். தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 'பொழில் வாழ்த்துப் பாடல்” இசைக்கப்பட்டது. தொடர்ந்து சிறுவர்கள் அங்கத்தில், செல்வி கண்மனி தமிழ் பாடலை பாடினார். விக்ரம் கிருஷ் 'நீதி வெண்பா' கூறினார். விக்ரம் தியா நன்னெறி பாடல் பாடினார். வர்ணிகா வினேஷ் மனோ அன்னாசிப் பழத்தின் நன்மைகளை அழகாகக் கூறினார். தமிழோவியா அருள்பிரகாஷ் பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியை கூறினார். மேகவர்தினி அருள்பிரகாஷ் விலங்குகள் தினத்தை முன்னிட்டு, சிங்கப்பூரில் விலங்குகளைக் காப்பாற்றும் ஆர்வலர்களை பற்றி பேசினார். தொடர்ந்து வந்த அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அறிமுகவுரையில் 'முகநிலை' என்னும் தலைப்பில் பல்வேறு இலக்கியக் குறிப்புகளுடன் அழகுற பேசினார். உஷா கிருஷ்ணமூர்த்தி ' எண் 180-இன் சிறப்புகள்' பற்றி பேசினார். 'அகிம்சை' என்னும் தலைப்பில் ஹேமா பிரபாகரன் விரிவாக சிற்றுரையாற்றினார். சிறப்புரையில் திருச்சியிலிருந்து முனைவர் கரு. கலையரசி 'சங்ககால மகளிர்' என்னும் தலைப்பில் இலக்கிய நூல்களில் வரும் சங்ககால மகளிர்கள் பற்றி பல அரிய செய்திகளை மேற்கோள் காட்டி அழகுற பேசினார். சவிதா, மோகனபிரியா, கஷ்தூரி, தீபிகா, ஆர்த்தி ஆகியோர் 108-வது மாதத்தை முன்னிட்டு “திணை இலக்கியத் திரட்டு” வாயிலாக புறநானூற்றில் வரும் ஐந்து பாடல்கள் விளக்கும் கதைகளை அழகுற விளக்கினார்கள். நிகழ்ச்சி முழுவதும் காணொளியாக முகநூல் வழி நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சி பொழில் பண்பலையில் நேரலையாக ஒலிபரப்பப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டு மகிழ்ந்தனர். பார்வையாளர் கருத்துரைப்பு அங்கத்தில் பொங்கோல் சமூக மன்ற இந்திய நற்பணி செயற்குழுவின் துணைத்தலைவர் திரு. முஜீப் கலந்துகொண்டு கருத்துரைத்தார். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த வ. கருணாநிதி கவிதையோடு தம்முடைய கருத்தினைப் பகிர்ந்தார். சிறார்கள் பிரிவில் பேசிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, பிரதீபா அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர். உஷா கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாவருக்கும் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் பிறந்தநாள் கொண்டாடுவோருக்கு, பிறந்தநாள் வாழ்த்துப் பாடலுடன் சிறப்பான முறையில் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. முகநூலில் கண்டுகளிக்க: https://www.facebook.com/share/v/1JPZcz9X5h/ அமைப்பின் இணையப்பக்கம்: https://www.ilakkiyapozhil.com நன்றி! மரபுடன், எல்ல.கிருஷ்ணமூர்த்தி வாழ்வியல் இலக்கியப் பொழில் சிங்கப்பூர்.