📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 18, 2026 10:33 AM

வைபவ் சூர்யவன்ஷிக்கு எல்லாம் பிளேயிங் 11

வைபவ் சூர்யவன்ஷிக்கு எல்லாம் பிளேயிங் 11

வைபவ் சூர்யவன்ஷிக்கு எல்லாம் பிளேயிங் 11-இல் இடம் கொடுக்க முடியாது.. கம்பீர், ஸ்ரேயாஸ் அதிரடி முடிவு

டெல்லி: ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மீது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் அவர் போட்டிகளில் களமிறங்காமல் மாற்று வீரராக பெஞ்சில் மட்டுமே அமருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குத் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடியே முக்கிய காரணமாக அமைந்தது.

அபிஷேக் சர்மா 3 போட்டிகளில் மொத்தம் 229 ரன்கள் குவித்து அசுர ஃபார்மில் உள்ளார். தொடரின் கடைசிப் போட்டியில் வெறும் 30 பந்துகளில் சதம் விளாசி, 34 பந்துகளில் 108 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தார். முதல் போட்டியிலும் 32 பந்துகளில் 82 ரன்கள் விளாசி மிரட்டினார்.

மறுமுனையில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்கள் (57 ரன்கள் மற்றும் 50 ரன்கள்) விளாசி மொத்தம் 117 ரன்கள் சேர்த்தார். கடைசிப் போட்டியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்து அசத்தியது. ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் ஜோடி அபார ஆட்டம் ஆடியது.

வைபவ் சூர்யவன்ஷி உள்நாட்டுப் போட்டிகளில் 216-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் கலக்கினாலும், வெற்றிகரமான இந்த தொடக்க கூட்டணியை மாற்ற அணி நிர்வாகம் விரும்பவில்லை. சர்வதேச அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்க தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் முடிவு செய்துள்ளனர்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணி நேரடியாக காலிறுதியில் விளையாடுகிறது. அந்த தொடரில் ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டாலோ மட்டுமே வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி காலிறுதியில் வென்றால் அடுத்து அரையிறுதியில் விளையாடும். அதில் வென்றால் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். எனவே, மூன்று போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. அந்த மூன்றும் நாக்-அவுட் போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.