📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 12, 2026 07:04 PM

வேளாண்மை பட்ஜெட்டை விவசாயிகள் கொண்டாடி வருகிறார்கள்

வேளாண்மை பட்ஜெட்டை விவசாயிகள் கொண்டாடி வருகிறார்கள்

வேளாண்மை பட்ஜெட்டை விவசாயிகள் கொண்டாடி வருகிறார்கள்- பதிலுரையில் அமைச்சர் வினோத் பெருமிதம்

விவசாயிகளின் பெரும்பான்மையான கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில்தான் இந்த வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

Published : August 12, 2026 at 5:16 PM IST

சென்னை: தூண்டுதலின் பேரில் சிலர் வேளாண் பட்ஜெட்டை விமர்சித்தாலும், உண்மையான விவசாயிகள் பட்ஜெட்டை கொண்டாடி வருகிறார்கள் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான பதிலுரையில் அமைச்சர் வினோத் இன்று உரையாற்றினார். அப்போது, அவர் பேசும்போது, "வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு பொதுமக்கள் கொடுத்த வரவேற்பைத் தாங்க முடியாமல் சில கட்சிகள், இது வெற்று பட்ஜெட் எனக் கூறி வருகின்றன. ஆனால், இது வெற்று பட்ஜெட் இல்லை; வெற்றி பட்ஜெட் என விவசாயிகள் கருதுகின்றனர்.

மக்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் விஜய் வழங்கி வருகிறார். முழு நேரமும் மக்கள் சேவகராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார். அதே வழியில் எங்களையும் செயல்படுத்தி வருகிறார்.மீண்டும் பிறந்தால் விவசாயியின் மகனாக தாம் பிறக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினார். ஆனால், இன்று அனைத்து விவசாயிகளின் குடும்பங்களிலும் ஒரு மகனாகவே வாழத் தொடங்கிவிட்டார் என்பதுதான் உண்மை.

6,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை முதலமைச்சர் தள்ளுபடி செய்துள்ளார். விவசாயிகள் பிரச்சனைகள் வந்தால் உடனடியாக தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். யாரும் குறை சொல்ல முடியாத நிலையில் பட்ஜெட் அறிவித்துள்ளோம்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற போதுமான கால அவகாசம் வேண்டும் என்பதை அனைவரும் அறிவீர்கள். வேளாண் நிதிநிலை அறிக்கை திட்டம், தொடர்ந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

விவசாய சங்கங்களின் கருத்துகளைக் கேட்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விவசாயிகளின் பெரும்பான்மையான கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில்தான் இந்த வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கரும்பின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தின் திட்டங்களின் பல்வேறு கூறுகளை நீக்கி, புதிய வடிவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். பெங்களூரா மாம்பழத்திற்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்கப்படும்.

விவசாயிகளின் பிரச்சனை ஓரிரு நாட்களில் தீர்க்க முடியும் என்றால் கடந்த ஆட்சிகளில் தீர்த்திருக்கலாமே?

இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை விவசாயிகளுக்காக செயல்படுத்த உள்ளோம். விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அறிவித்துள்ளோம். அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு திட்டங்களுக்கும் முறையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மையில் பாரம்பரிய நிலங்களை பராமரிக்க போதுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான திட்டங்களை கள ஆய்வு செய்து அறிவித்து வருகிறோம். வெளிப்படைத்தன்மையோடு தகுதியுடையவர்களுக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தூண்டுதலின் பேரில் சிலர் வேளாண் பட்ஜெட்டை விமர்சிப்பதை மக்களும் நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. ஆனால், உண்மையான விவசாயிகள் வேளாண்மை பட்ஜெட்டை கொண்டாடி வருகிறார்கள்.

சூரியனால் அனைவருக்கும் வியர்த்தது. நீங்கள் வந்த பிறகு சூரியனுக்கு வியர்த்தது" என்று அமைச்சர் வினோத் கூறினார்.