விஜய் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரத்துடன் டிபன் பாக்ஸ் சப்ளை? இதுதான் தூய சக்தியா மக்கள் கேள்வி
விஜய் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரத்துடன் டிபன் பாக்ஸ் சப்ளை? இதுதான் தூய சக்தியா மக்கள் கேள்வி
திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் தமிழக முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசார கூட்டத்திற்கு வெளி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்களை கவரும் வகையில் தவெக வேட்பாளர் சத்தியபாமா மற்றும் முதல்வர் விஜய் மற்றும் விசில் சின்னத்துடன் புகைப்படங்கள் அடங்கிய டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது.
இந்த டிபன் பாக்ஸில் ரூ. 5 ஆயிரம் பணம் வைத்து கொடுப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, தவெக சார்பில் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக முதியவர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில், தவெகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக எம்பி இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதேபோல், தவெகவினர் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பதாக அவரது கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டி இருந்தார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன். பரிசு பொருட்கள் கொடுக்க மாட்டேன். நாங்கள் தூய ஆட்சி நடத்தி வருகிறோம். தூய அரசியல் செய்து வருகிறோம் எனக் கூறும் தவெகவினர் எதற்காக வாக்காளர்களை கவர்வதற்காக இது போன்ற பொருட்களை வழங்கி வருகிறார்கள். பணம் ஏன் வழங்கப்படுகிறது. வேறு கட்சி எம்எல்ஏக்களையும் குதிரை பேரம் மூலம் இழுத்து வருகின்றனர். இது தூய அரசியல் என்ற விஜய்யின் பேச்சுக்கு முரணாக உள்ளது’’ என்றனர்.
* அமைச்சர் மீது புகார்
தாராபுரம் திமுக தலைமை முகவர் வழக்கறிஞர் ராஜேந்திர பாபு மற்றும் வழக்கறிஞர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்,பெலிக்ஸ் ராஜாவிடம் அளித்து உள்ள புகாரில், ‘‘அமைச்சராக உள்ள கீர்த்தனா தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே உள்ள கிராமத்திற்கு சென்று குழந்தைகளை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதுபோல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அவர் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்’’ என்று கூறி உள்ளார். இதேபோல் மற்றொரு புகாரில், திமுக துண்டை போட்டு தவெக கட்சியின் பிரசார பாடல் பின்னணியில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ரூ.2000 என கொடுக்கப்படும் வீடியோவும் வைரலாகிறது. அந்த வீடியோவை நீக்கி, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.