📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 30, 2026 03:01 PM

விளையாட்டு நகரம் ஒப்பந்தப்புள்ளி ரத்து: தமிழக அரசு தீவிர மறுஆய்வு

விளையாட்டு நகரம் ஒப்பந்தப்புள்ளி ரத்து: தமிழக அரசு தீவிர மறுஆய்வு

சென்னை: சென்னைக்கு அருகே அமைக்கப்பட இருந்த விளையாட்டு நகரத்துக்கான திட்டப்பணி கைவிடப்பட்ட நிலையில், அத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள செம்மஞ்சேரி பகுதியில் பிரம்மாண்ட விளையாட்டு நகரத்தை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அதையடுத்து, செம்மஞ்சேரியில் 112 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

காமன்வெல்த், ஆசிய விளையாட்டுகளை நடத்தும் அளவுக்கு அனைத்துலகத் தரத்திலான விளையாட்டு வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான ஆரம்பக்கட்ட களப்பணிகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுஆய்வு செய்தது. இந்த ஆய்வின்போது, தற்போதுள்ள திட்ட வடிவமைப்பு எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போன்ற மிகப்பெரிய விளையாட்டுத் தொடர்களை நடத்துவதற்குப் போதுமானதாக இருக்காது என மதிப்பிடப்பட்டது.

இதன் காரணமாக, ஒதுக்கப்பட்ட 112 ஏக்கர் நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்தி, பல்வேறு விளையாட்டுகளை ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இன்னும் பிரம்மாண்டமாக இத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒப்பந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பணி ஆணை ரத்து செய்யப்பட்டு, களப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்நடவடிக்கைக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது.

புதிய வடிவமைப்பு தயாரிக்கப்பட்ட பின்னர், விரிவான முறையில் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.