📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news October 02, 2026 05:03 PM

விபத்துக்குப் பின்னர் தப்பியோடிய இழுவை லாரி ஓட்டுநர் கைது

விபத்துக்குப் பின்னர் தப்பியோடிய இழுவை லாரி ஓட்டுநர் கைது

டெஃபு தொழிற்பேட்டை வட்டாரத்தில் மரணத்தை விளைவித்த விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து தப்பி ஓடிய இழுவை லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெஃபு அவென்யூ 1 மற்றும் டெஃபு லேன் 7 சந்திப்பில் நிகழ்ந்த அந்த விபத்து பற்றிய தகவல் வியாழக்கிழமை (அக்டோபர் 1) காலை 10.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்துள்ளன.

மிதிவண்டியும் இழுவை லாரியும் சம்பந்தப்பட்ட அந்த விபத்தில் மிதிவண்டி ஓட்டிச் சென்ற 62 வயது மாது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவப் பணியாளர் அந்த மரணத்தை உறுதிசெய்தார்.

விபத்தில் தொடர்புடைய இழுவை லாரியின் 43 வயது ஓட்டுநர், காவல்துறை வருமுன்னர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். விசாரணைக்குப் பின்னர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த விபத்து தொடர்பாக ‘ஸ்டோம்ப்’ தளத்தில் காணொளி ஒன்று பகிரப்பட்டது. சம்பவ இடம் காவல்துறையினரால் சுற்றி மறைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்துக் கூம்புகள் அருகில் இருந்தன. மிதிவண்டி ஒன்று சாலையில் விழுந்து கிடந்ததையும் காணொளியில் காணமுடிந்தது.

சிங்கப்பூரில் சாலை விபத்துகளும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளும் கடந்த மூன்றாண்டுகளாக அதிகரித்து வரும் போக்கு காணப்படுவதாக ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை குறிப்பிட்டது.