வளர்ந்த இந்தியா இலக்கு; நிச்சயம் செய்து காட்டுவோம்: பிரதமர் மோடி சூளுரை
புதுடில்லி: அரசு தலைமை பொறுப்பில், 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, 76, ''மக்களின் ஆதரவாலும், ஆசீர்வாதத்தாலும் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். தொடர்ந்து சேவையாற்ற வாய்ப்பளித்த மக்கள் முன் தலைவணங்குகிறேன்,'' என, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பா.ஜ., மூத்த தலைவரான மோடி, 2001 அக்., 7ல், குஜராத் முதல்வராக பதவியேற்றார். 2014 வரை அம்மாநில முதல்வராக இருந்த அவர், அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, நாட்டின் பிரதமராக முதன்முறையாக பதவியேற்றார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக உள்ள மோடி, பிரதமர் பதவியில், 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். குஜராத் முதல்வராக, 13 ஆண்டுகள், பிரதமராக, 12 ஆண்டுகள் என, அரசு தலைமை பொறுப்பில், தொடர்ச்சியாக, 25 ஆண்டுகளை பிரதமர் மோடி நிறைவு செய்துள்ளார். இதை நாடு முழுதும் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று நடந்த, 'வளர்ந்த இந்தியா' உறுதியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
வரும், 2047க்குள் வளர்ந்த இந்தியா, சுயசார்பு இந்தியா, உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவது, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது, விண்வெளித் துறையில் புதிய உச்சங்களை தொடுவது போன்ற லட்சியங்களை நோக்கி, நம் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. இந்த உத்வேகம் நம்ப முடியாத வகையில், வியக்கும் அளவுக்கு இருக்கிறது. குஜராத் முதல்வராக, 2001 அக்., 7ல் பதவியேற்ற போது, இந்த உயரத்துக்கு வருவேன் என, நினைத்து கூட பார்த்தது கிடையாது.
அரசு தலைமை பொறுப்பில், 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். மக்களின் தொடர்ச்சியான ஆதரவும், ஆசீர்வாதமும் தான் இதற்கு காரணம். அவர்கள் முன், தலைவணங்குகிறேன். தே.ஜ., கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி.
சட்டசபை தேர்தலாக இருந்தாலும் சரி, லோக்சபா தேர்தலாக இருந்தாலும் சரி, மக்கள் எனக்கு சேவையாற்ற வாய்ப்பு அளித்தனர். இதற்காக ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் மரியாதை செலுத்துகிறேன். என்னை எதிர்த்தவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். ஏனெனில், அவர்கள் ஜனநாயகத்தின் வலிமையை எனக்கு உணர்த்தினர்.
என் வாழ்வில் எதுவும் வீணாகவில்லை. இந்த, 25 ஆண்டு கால பயணத்தில் கிடைத்த ஒவ்வொரு அனுபவமும், ஏதேனும் ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்தன. தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால், முன்கூட்டியே அரசியலில் குதித்து இருப்பேன். என் கவனம் எப்போதும் கடமையாற்றுவதில் தான் இருக்கிறது. கடமையாற்றுவது தான் என் தர்மம். 25 ஆண்டு கால அரசு தலைமை பொறுப்பு என்பது, என் தனிப்பட்ட சாதனை அல்ல. மக்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், பா.ஜ., தொண்டர்களால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
அரசு தலைமை பொறுப்பில், 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டில்லியின் சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: நாட்டுக்காகவும், 140 கோடி மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். நாட்டுக்காக இன்னும் ஆற்றலுடனும், வலிமையுடன் பணியாற்ற வேண்டும் என, பிரார்த்தித்தேன். என்னை பொறுத்தவரை, மக்களே எனக்கு கடவுள். அவர்களது ஆசியால் தான் எந்தவொரு பொறுப்பிலும் சிறப்பாக பணியாற்ற முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.