📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 18, 2026 06:33 PM

யு.பி.ஐ. கட்டணம்: மோடி

யு.பி.ஐ. கட்டணம்: மோடி

யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (NPCI) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர் (P2M) யு.பி.ஐ. பரிவர்த்தனைகளில் குறிப்பிட்ட வகை பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவிகிதம் கட்டணம் (MDR) வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்திற்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி-யும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.5,000 மதிப்பிலான பரிவர்த்தனைக்கு வணிகரிடமிருந்து ரூ.20 யு.பி.ஐ. கட்டணமும் ரூ.3.60 ஜி.எஸ்.டி-யு சேர்த்து ரூ.23.60 வசூலிக்கப்படும். அக்டோபர் 15, 2026 முதல் இக்கட்டண வசூல் அமலுக்கு வர உள்ளது.

இக்கட்டணம் நுகர்வோரிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்படாது என்றும் வணிகரிடமிருந்தே வசூலிக்கப்படும் என்றும் மோடி அரசு அறிவித்துள்ளது. ஆனால், இது மறைமுகமாக நுகர்வோரின் பணத்தை வேட்டையாடும் சதித்திட்டமே ஆகும். மேலும், ஏற்கெனவே பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பாசிச நடவடிக்கைகளாலும் கொரோனா ஊரடங்கு, ஆன்லைன் வர்த்தகத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களை இக்கட்டண வசூல் மேலும் நொடிந்து போகச் செய்யும்.

மறுபுறம், ரூ.75 ஆயிரம் வரையே இந்த 0.4 சதவிகித கட்டணம் (ரூ.75,000-க்கு ரூ.300 கட்டணம்) கணக்கிடப்படுகிறது. ரூ.300 கட்டணம் உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கு மேல் எத்தனை கோடிக்கு பரிவர்த்தனை செய்தாலும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.300 மட்டுமே அதிகபட்சமாகக் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம், வழக்கம்போல ஏழை, எளிய மக்கள், வணிகர்களை ஒட்டச்சுரண்டிவிட்டு, பணக்காரர்கள்-பெருநிறுவனங்களை பாதுகாக்கின்ற தனது வர்க்கப் பாசத்தை பாசிச மோடி அரசு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. சிறு-குறு வணிகர்கள், பெரியளவிலான சில்லறை வர்த்தக வணிகர்களை ஒழித்துக்கட்டி அம்பானி-அதானிகளுக்கான சந்தையை உருவாக்கும் சதித்திட்டம் இதில் அடங்கியுள்ளது.

மேலும், சிறு வணிகர்களுக்கு இக்கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான வரையறையாக யு.பி.ஐ. க்யூ.ஆர். (UPI QR) மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறும் வணிகரே சிறு வணிகராகக் கருதப்படுகிறார். இந்த வரையறைக்குள் ஒரு வாழைப்பழ வியாபாரிக் கூட விலக்கு பெற முடியாது என்பதே உண்மை நிலையாகும். வருங்காலத்தில் இந்த விலக்கும் தனிநபர்-தனிநபர் விலக்கும் கூட பறிக்கப்படும் அபாயம் உள்ளது. யு.பி.ஐ. கட்டணமும் மென்மேலும் அதிகரிக்கப்பட்டு சுரண்டல் தீவிரப்படுத்தப்படும்.

படிக்க: யு.பி.ஐ. கட்டணக் கொள்ளை | கேலிச்சித்திரங்கள்

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில், இவ்வாறு பெறப்படும் கட்டணத் தொகையானது பிற வரியைப் போல மத்திய அரசிடம் செல்லாது. அது யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைச் சூழலில் செயல்படும் வங்கிகள், பணப் பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள், யு.பி.ஐ. செயலிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்குப் பிரித்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் யு.பி.ஐ. பரிவர்த்தனைச் சந்தையில் ஏறக்குறைய 80 சதவிகிதப் பங்கை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள “ஃபோன் பே” (PhonePe), “ஜி.பே” (GPay) ஆகிய இரண்டு நிறுவனங்களே கொண்டுள்ளன. இதன் மூலம், இந்திய மக்கள், வணிகர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படும் பணமானது அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடப்பட உள்ளது.

யு.பி.ஐ. பரிவர்த்தனைக்குப் பதிலாக கார்டு பரிவர்த்தனைக்கு மாறினாலும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் விசா கார்டு, மாஸ்டர் கார்டு போன்ற சர்வதேச கட்டண வலையமைப்புகள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களாகும். ஆகவே, ‘டிஜிட்டல் இந்தியாவின்’ பணமில்லா பரிவர்த்தனையானது இனி அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் சட்டைப்பையை நிரப்புவதே ஆகும்.

மொத்தத்தில், “டிஜிட்டல் இந்தியா” என்ற பெயரில் பணமதிப்பழிப்பு, ஏ.டி.எம். சேவைகள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் மக்களை யு.பி.ஐ. பரிவர்த்தனைக்குள் தள்ளிய மோடி அரசு, தற்போது யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்து, அமெரிக்கக் கார்ப்பரேட்டுகள் மக்களைச் சுரண்டுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்தியா போன்ற ஏழை-எளிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நாட்டில், அம்மக்களின் சொற்ப பணத்தையும் கொள்ளையிட திறந்துவிடுவது அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும். அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பையும் அமெரிக்க கார்ப்பரேட்டுகளையும் உச்சிகுளிரச் செய்யவே பாசிச மோடி அரசு இக்கொள்ளையில் இறங்கியுள்ளது.

இதன் மூலம், பாசிஸ்ட் மோடி மீண்டும் தனது அமெரிக்க அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்தி, தான் ஒரு கைதேர்ந்த அமெரிக்க அடிமை என்பதை நிரூபித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads