யு.பி.ஐ., பரிவர்த்தனை கட்டணம் வளர்ச்சி பயணத்திற்கு அவசியம்!
நம் நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையான, யு.பி.ஐ., 2016ல் அறிமுகமானது. அப்போது, எம்.டி.ஆர்., எனப்படும், 'வணிகர் தள்ளுபடி விகிதம்' என்ற கட்டணம் விதிக்கப்பட்டது. அதன்பின், 2020ல், இந்த வணிகர் தள்ளுபடி விகித கட்டணம் பூஜ்ஜியமாக்கப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது.
யு.பி.ஐ., பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றபடி பரிவர்த்தனைகளை கையாள்வது, 'சர்வர்' உள்ளிட்ட தொழில்நுட்ப கட்டமைப்புகளை பராமரிப்பது போன்றவற்றுக்கு, வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்களுக்கு அதிகம் செலவாகிறது.
இதன் காரணமாகவே, யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகித கட்டணத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி, 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு, 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 75 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக, 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணமும், தனி நபரிடமிருந்து வணிகர்களுக்கு அனுப்பப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், ரயில் டிக்கெட்டுகள், எரிபொருள், விவசாய இடுபொருட்கள், கிரெடிட் கார்டு நிலுவை தொகை செலுத்துதல், தொலைதொடர்பு சேவைகள் அல்லது பயன்பாட்டு கட்டணங்கள், இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை மற்றும் வரிகள் செலுத்துதல் போன்ற சில வகையான பரிவர்த்தனைகளுக்கு, வணிகர்களிடம் இருந்து நிலையான கட்டணமாக, பரிவர்த்தனை ஒன்றுக்கு, 5 ரூபாய் வசூலிக்கப்படும்.
மேலும், 'யு.பி.ஐ., - கியூ.ஆர். கோடு வாயிலாக, மாதம் ஒரு லட்சம் வரை பரிவர்த்தனை செய்யும் சிறு வணிகர்களுக்கு, இந்த கட்டண முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், 96 சதவீத பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது' என, மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது, ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நடக்கின்றன. அதாவது, 2025 - 26ம் நிதியாண்டில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அவற்றின் மதிப்பு, 314 லட்சம் கோடி ரூபாய். இத்தகைய பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் வங்கிகள் அல்லது கட்டண சேவை நிறுவனங்களுக்கு, வணிக தள்ளுபடி கட்டணத்தை அமல்படுத்துவது அவசியம் என்பதால், புதிய முறை அறிமுகமாகி உள்ளது.
இதன் வாயிலாக, வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான நிலையான வருவாய் ஓட்டத்தை உறுதி செய்வதுடன், பெருமளவிலான மக்களுக்கு தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை சாத்தியமாக்க முடியும் என, மத்திய அரசு நம்புகிறது. எனவே, மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கலாம்.
அத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே அனுப்பப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்பதும், மக்களுக்கு நன்மை தரக்கூடியதே. ஆனாலும், பெரிய வணிகர்கள் இந்த கட்டண சுமையை மறைமுகமாக பொருட்களின் விலையை உயர்த்துவதன் மூலம் நுகர்வோர் மீது சுமத்தலாம்.
டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய பயணத்தில் சறுக்கலாக, நடுத்தர மக்கள் பெரிய தொகைகளை ரொக்கமாக பெறவும் துாண்டலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆரம்ப காலத்தில், மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக, தற்போது அறிவிப்பு உள்ளது என்றும் விமர்சிக்கப்படுகிறது.
இருப்பினும், வணிகர்களுக்கு 2,000 ரூபாய்-க்கு மேல் செலுத்த வேண்டியிருந்தால், அதை, 1,000 ரூபாயாக இரண்டு முறையாக பிரித்து அனுப்பலாம். பெரிய அளவிலான தொகையை யு.பி.ஐ., வாயிலாக அனுப்பாமல் வங்கியின், 'நெப்ட்' வசதி வாயிலாக செலுத்தலாம் என்றும் யோசனை கூறப்படுகிறது.
எனவே, மத்திய அரசின் முடிவை, வளர்ச்சிக்கான பயணம் சுமுகமாக நடைபெற அறிமுகம் செய்யப்பட்ட மாற்றமாகவே கருதலாம். அத்துடன், யு.பி.ஐ., சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இடையே போட்டி உருவாகி, பொதுமக்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கும் என்றும் நம்பலாம்.