📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 14, 2026 06:03 PM

11 பிரபல பிராந்தி, ரம் பிராண்டுகளுக்கு டாஸ்மாக் தடை: காரணம் என்ன?

11 பிரபல பிராந்தி, ரம் பிராண்டுகளுக்கு டாஸ்மாக் தடை: காரணம் என்ன?

11 பிரபல பிராந்தி, ரம் பிராண்டுகளுக்கு டாஸ்மாக் தடை: காரணம் என்ன?

தமிழ்நாட்டில் 'என்ரிகா எண்டர்பிரைசஸ்' நிறுவனம் தயாரித்து வழங்கும் 11 வகையான மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு தமிழ்நாட்டின் மாநில வாணிபக் கழகம் (TASMAC) உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின்(FSSAI) தெற்கு மண்டல அதிகாரிகள் அண்மையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, அந்நிறுவனம் தயாரிக்கும் குறிப்பிட்ட மதுபானங்களில் அனுமதிக்கப்படாத மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய செயற்கையான சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பொருட்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோருக்கு இவற்றை விற்கக் கூடாது என்றும் FSSAI உத்தரவிட்டது.

FSSAI மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையரின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே.நந்தகுமார் அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் கிடங்கு மேலாளர்களுக்கு அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், குறிப்பிட்ட 11 மதுபான பிராண்டுகளைக் கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பவோ, பார்கள் (FL2 & FL3 உரிமங்கள்) மற்றும் கடைகள் மூலம் நுகர்வோருக்கு விற்கவோ கூடாது எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1.VSOP எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி

2.லூயிஸ் வெர்னான்ட் XO பிளெண்டட் பிரீமியம் பிராந்தி

3.மெக்டொவல்ஸ் VSOP பிராந்தி

4.நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி

5.மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி

6.ஹனி பீ ஃபைன் பிராந்தி

7.என்ரிகா VSOP செலக்ட் பிராந்தி

8.என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் XO பிராந்தி

9.என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி

10.வீரன் ஸ்பெஷல் பிராந்தி

11.என்ரிகா ஓல்ட் இன்டி கிளாசிக் டார்க் ரம்

என்ரிகா நிறுவனம் டாஸ்மாக்கிற்கு 20-க்கும் மேற்பட்ட மதுபான வகைகளை விநியோகம் செய்து வருகிறது.

இதில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பெரும்பாலான பிராண்டுகள், டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் விற்பனையாகும் சாதாரண ரக மதுபானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.