📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 10, 2026 02:01 AM

12 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்... கண் முன்னே வெட்டப்படுவதை பார்த்து கதறி அழுத பெண்

12 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்... கண் முன்னே வெட்டப்படுவதை பார்த்து கதறி அழுத பெண்

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே, மின்கோபுரம் அமைப்பதற்காக விவசாய நிலத்தில் வளர்த்து வந்த 89 மரங்கள் வெட்டப்பட்டநிலையில், மரங்களை வளர்த்து வந்த பெண், அவை வெட்டப்படுவதை பார்த்து கதறி அழுத காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

12 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்

வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதனின் மனைவி செல்வி (58), தனது விவசாய நிலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மகோகனி, தேக்கு, தென்னை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார்.

இதற்கிடையில், அவரது விவசாய நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்பாதை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்கு செல்வியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தங்கள் நிலத்தில் பல ஆண்டுகளாக மரங்களை வளர்த்து வருவதால், வேறு வழியாக மின்பாதையை அமைக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பு

இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வியின் நிலத்தில் உயர் அழுத்த மின்கம்பத்திற்கான கோபுரம் அமைக்கப்பட்டு, மின் கம்பிகளும் பொருத்தப்பட்டன. அப்போது மரங்களுக்கு இழப்பீடாக ரூ.97 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விவசாய நிலத்தில் இருந்த 89 மரங்களை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெட்டி அகற்றினர்.

மரங்களை கட்டிப்பிடித்து கதறி அழுத செல்வி

தான் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த மரங்கள் வெட்டப்படுவதை பார்த்த செல்வி அதிர்ச்சியடைந்தார். மரங்களை வெட்ட வேண்டாம் என கதறிய அவர், வெட்டப்பட இருந்த மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்.

அரசு பள்ளிக்கு நிலம் தானம்

செல்வி, அதே பகுதியில் அரசு பள்ளி கட்டுவதற்காக 40 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“10 ஆண்டுகளாக வளர்த்த மரங்கள்!” | Kallakurichi | trees https://t.co/pPn9ovQOIo #Kallakurichi #TamilNadu #TreeCutting #Farmers