மொசாம்பிக்கில் தமிழ் நாள் 2026 விழா
அயல்நாட்டில் வாழ்ந்தாலும், ஆங்கிலமே வாழ்க்கையானாலும், தமிழர்கள் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் என்றுமே விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்குச் சான்றாக, ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து நடத்திய 'தமிழ் நாள் 2026' விழா, முத்தமிழ் கொண்டாட்டமாக அமைந்தது. இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக இந்திய உயர் ஆணையர் மற்றும் அவரது மனைவி வருகை தந்திருந்தனர்.

இந்தியத் தேசிய கீதத்துடனும், தமிழ்த்தாய் வாழ்த்துடனும் விழா இனிதே தொடங்கியது. விழாவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழும் தழைத்தோங்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

விழாவின் தொடக்கமாகப் பரதநாட்டியமும், பல நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழரின் பாரம்பரிய உடைகளை அணிந்து பிள்ளைகள் ஆடிய நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்து, விழாவிற்கு ஒரு பிரம்மாண்டமான தொடக்கத்தைத் தந்தது.

இவ்விழாவின் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளின் கற்பனைத் திறனையும், தமிழரின் கலாச்சார அழகையும் பறைசாற்றும் வகையில் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

விழாவின் மிக அழகான பகுதி, சுட்டிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பாகும். சிறிய குழந்தைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மாந்தர்களாக உருமாறி மேடைக்கு வந்து, தங்களின் மழலை பேச்சால் அனைவரையும் கவர்ந்து பாராட்டுகளை அள்ளிச்சென்றனர்.

மேலும், சமூக சிந்தனையைத் தூண்டும் வகையில், சிறுவர்-சிறுமிகள் இணைந்து விவசாயத்தின் மகத்துவத்தையும், உணவின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அதனைத் தொடர்ந்து, தமிழின் இனிமையையும் பெருமையையும் போற்றும் வகையில் கவிதை வாசிப்பும் நடைபெற்றது.

புலம்பெயர்ந்து வாழும் சூழலில், மொசாம்பிக்கில் வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியின் இனிமையையும், தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும் கொண்டு சேர்ப்பதே இவ்விழாவின் முதன்மையான நோக்கமாகும். மேலும், பிற மாநில இந்தியர்களுடன் ஒரு சுமூகமான கலாச்சார உறவை வளர்க்க இது ஒரு பாலமாக அமைந்தது. இத்தகைய விழாக்கள் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்லாமல், வேற்றுநாட்டில் தமிழ் மொழியைக் காக்கும் ஒரு உன்னத முயற்சியாகும். 'தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!' என்ற முழக்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

- நமது வாசகர் Subbiah.