📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil May 28, 2026 03:00 AM

2027 முதல் முழுமையான பழைய பெயருக்கு மாறும் சிஎச்ஐஜே பள்ளிகள்

2027 முதல் முழுமையான பழைய பெயருக்கு மாறும் சிஎச்ஐஜே பள்ளிகள்

சிஎச்ஐஜே தொடக்கப்பள்ளி (தோ பாயோ), சிஎச்ஐஜே உயர்நிலைப்பள்ளி (தோ பாயோ) ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் அவற்றின் வரலாற்றுத் தனித்தன்மை மற்றும் மரபுடைமையைப் போற்றும் வகையில், 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தங்களது முழுமையான மூலப் பெயருக்கு மாறவுள்ளன.

இதன்படி, இனி தோ பாயோ என்ற இடத்தின் பெயர் நீக்கப்பட்டு, இப்பள்ளிகள் ‘கான்வென்ட் ஆஃப் தி ஹோலி இன்ஃபன்ட் ஜீசஸ் (தொடக்கப்பள்ளி)’ என்றும் ‘கான்வென்ட் ஆஃப் தி ஹோலி இன்ஃபன்ட் ஜீசஸ் (உயர்நிலைப்பள்ளி)’ என்றும் அழைக்கப்படும். இப்பெயர் மாற்றத்திற்குப் பள்ளியின் நிறுவனர்கள், நிர்வாகம், கல்வி அமைச்சு (MOE) ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளதாக செவ்வாய்க்கிழமையன்று (மே 26) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் மிக ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இப்பள்ளி, கடந்த 1854ஆம் ஆண்டு நான்கு கத்தோலிக்கத் துறவிகளால் விக்டோரியா ஸ்திரீட்டில் தொடங்கப்பட்டது.

இது சிங்கப்பூரின் மிகப் பழமையான கத்தோலிக்க மகளிர் பள்ளியாகும். அன்று உலகளவில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட சூழலில், ஆதரவற்ற குழந்தைகள் உட்பட அனைத்துப் பொருளியல் பின்னணியைக் கொண்ட சிறுமிகளையும் அரவணைத்து இப்பள்ளி தொடக்கக் கல்வியை வழங்கியது.

பின்னர், 1983ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இப்பள்ளிகள் விக்டோரியா ஸ்திரீட்டிலிருந்து தோ பாயோ வட்டாரத்துக்கு மாற்றப்பட்டு, இடத்தின் பெயருடன் சேர்த்து மறுபெயரிடப்பட்டன.

தற்போது, தங்களது வரலாற்றுப் பெருமையை நிலைநாட்ட இப்பள்ளிகள் மீண்டும் அவற்றின் முழுமையான பழைய பெயரிலேயே இயங்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.