தமிழகத்தின் புதிய டிஜிபி யார்; ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்
புதுடில்லி: தமிழக புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூவரில் ஒருவர் தமிழக டிஜிபியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்ந்தெடுக்கும் முக்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதுடில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர், பொதுப்பணிச் செயலாளர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பங்கேற்க தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்டோர் டில்லி சென்றிருந்தனர்.
கூட்டத்தில் தகுதியான போலீஸ் அதிகாரிகளின் பணி பதிவேடுகள், சீனியாரிட்டி ஆகியவற்றின் அடிப்படையில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இந் நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபிக்கான 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பட்டியலில் ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகிய 3 பேரின் பெயர்கள் உள்ளன.
இந்த பரிந்துரை பட்டியலானது விரைவில் தமிழக அரசுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர், இந்த மூவரில் இருந்து ஒருவர் தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அறிவிக்கப்படுவார். வெகு விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.