3 மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு: காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
3 மாதங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு: காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அலங்காநல்லூர் அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தின் கிழக்குத் தெருவில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தினரிடமும், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில் இன்று பெண்கள் காலி குடங்களுடன் அலங்காநல்லூர் ஊமச்சிகுளம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் முறையாக வழங்கப்படாததால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், குடிநீரை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள், விரைவில் முறையான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n