📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 17, 2026 05:03 AM

சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு இ

சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு இ

சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு இ-கே.ஒய்.சி. கட்டாயம்: கூட்டத்தை தவிர்க்க ஆக.23 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தியுள்ள இ-கே.ஒய்.சி. எனப்படும் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நேற்றுடன் முடிவடையும் என்று அறிவிக்கபட்டிருந்த நிலையில், எரிவாயு அலுவலகங்களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் மற்றும் தொழில் நுட்பசிக்கலால் இந்த அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சுமார் 2.40 கோடி வீட்டு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் பெறும் வாடிக்கையாளர்கள், எரிவாயு இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவரின் விவரங்களை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் செயலி மூலம் சரிபார்த்து இ-கே.ஒய்.சி. பணியை நிறைவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியை முடிக்க நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் இன்னும் சுமார் 10 சதவீத வாடிக்கையாளர்கள் இந்த சரிபார்ப்பை முடிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் காஸ் ஏஜென்சிகளை பொதுமக்கள் நாடியதால் பல இடங்களில் கூட்ட நெரிசல் மற்றும் தொழில் நுட்பசிக்கல்கள் ஏற்பட்டது. ஏற்கனவே எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கான நடைமுறைகளுடன் மீண்டும் மீண்டும் புதிய சரிபார்ப்புகளை கட்டாயப்படுத்துவதால், பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் பொதுமக்களுக்கு கூடுதல் அலைச்சல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நேரில் எரிவாயு அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இ-கே.ஒய்.சி. பணிக்கான அவகாசம் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இ-கே.ஒய்.சி. செய்யாதவர்கள் தங்களது எரிவாயு அலுவலகங்களை அணுகி, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் செயலி மூலம் விவரங்களை பதிவு செய்து சரிபார்ப்பை நிறைவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

பொதுமக்களுக்கு கூடுதல் சுமையையும் அலைச்சலையும் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய நடைமுறைகளை விதிப்பதை விட, எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு எளிமையான, வெளிப்படையான முறையில் சேவைகளை வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.