3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்; வானிலை மையம்
சென்னை: கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை; தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. வட மாவட்ட கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளி மண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சை, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரையில் இன்று மாலை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.