📅 Wednesday, 29 July 2026 IST | ஆடி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 28, 2026 10:33 AM

30 பந்துகள், 0 ரன், 5 விக்கெட்டுகள்.. ஜஸ்டின் கிரீவ்ஸின் வேகப்பந்து வீச்சில் பாகிஸ்தான் காலி

30 பந்துகள், 0 ரன், 5 விக்கெட்டுகள்.. ஜஸ்டின் கிரீவ்ஸின் வேகப்பந்து வீச்சில் பாகிஸ்தான் காலி

30 பந்துகள், 0 ரன், 5 விக்கெட்டுகள்.. ஜஸ்டின் கிரீவ்ஸின் வேகப்பந்து வீச்சில் பாகிஸ்தான் காலி

டரூபா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளில், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்டின் கிரீவ்ஸ் 30 பந்துகளில் ஒரு ரன் கூட தராமல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இவரது பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 282 ரன்களுக்கு சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை அரங்கேறியது. ஜஸ்டின் கிரீவ்ஸ் தனது 2வது ஸ்பெல்லில் வீசிய 5 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசி, ஒவ்வொரு ஓவரிலும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே தொடர்ந்து 5 மெய்டன் ஓவர்களை வீசி, அதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக தனது முதல் ஸ்பெல்லில் அவர் 6 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்திருந்த போதிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீவ்ஸின் இந்த அபாரமான பந்துவீச்சில் முதலில் சிக்கியது சிறப்பாக விளையாடி 109 ரன்கள் எடுத்திருந்த ஷான் மசூத் ஆவார். அவரைத் தொடர்ந்து அமீர் ஜமால் (3), அலி உஸ்மான் (0), முகமது ரிஸ்வான் (12) மற்றும் முகமது அப்பாஸ் (0) ஆகிய ஐந்து பேரையும் அடுத்தடுத்த மெய்டன் ஓவர்களில் கிரீவ்ஸ் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் 2வது நாள் ஆட்டநேர முடிவில் 199 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், 282 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

முன்னதாக தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் குவித்திருந்தது. இதன்மூலம் 29 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 3வது நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது. தற்போதைய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.