தவெகவில் இணைந்த 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்; 7 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
தவெகவில் இணைந்த 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்; 7 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஹெலிகாப்டர் விமானியாக இருந்த அறிவழகனும் இன்று தவெகவில் இணைந்தார்.
Published : June 6, 2026 at 7:34 PM IST
சென்னை: அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்எல்ஏக்கள் இன்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் உள்ளிட்டோர் முன்னிலையில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் 4 பேரும், முன்னாள் எம்எம்ஏக்கள் 7 பேரும் தவெக கட்சியில் தங்களை அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூன் 6) இணைத்துக் கொண்டனர்.
இவர்களுடன் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சிலரும் தவெக-வில் இணைந்துள்ளனர். சென்னை, பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த இணைவு நிகழ்வு அரங்கேறியது.
யார், யாரெல்லாம் இணைந்துள்ளனர்?
கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி), சுந்தரராஜ் (சங்ககிரி சட்டமன்ற தொகுதி), ராஜமுத்து (வீரபாண்டி சட்டமன்ற தொகுதி), மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி), பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி), ராஜவர்மன் (சிவகாசி சட்டமன்ற தொகுதி), வி.கே. ஆர். சீனிவாசன் (ஆற்காடு சட்டமன்ற தொகுதி) உள்ளிட்ட 7 முன்னாள் எம்எல்ஏ-க்கள் தவெகவில் இணைந்தனர்.
அதேபோன்று உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன், கடலூர் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்களும் தவெக-வில் இணைந்துள்ளனர்.
இவர்களைப் போலவே திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெ. கருணாநிதி, அமமுக-வை சேர்ந்த முருகன் போன்ற ஏராளமானோர் தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். இதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் விமானியான அறிவழகனும் இன்று தவெக-வில் இணைந்தார்.
குறைந்த அதிமுக-வின் பலம்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்கட்சி அந்தஸ்தை இழந்ததுடன், மூன்றாம் இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியே காரணம் என கூறி அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவருக்கு எதிராக போர் கொடி தூக்கினர். மேலும், அக்கட்சி இரண்டாக உடைந்தது. அத்துடன், சிலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியிலும் இணைய ஆரம்பித்தனர்.
இரண்டாக உடைந்த கட்சி சமீபத்தில் மீண்டும் இணைந்தாலும், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் போன்றோர் இன்னும் இபிஎஸ் தலைமை ஏற்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சூழல் நிலையில் இன்று ஒரே நாளில் அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு வந்து தவெகவில் இணைந்துள்ளனர்.