45 நாட்களில் உருவான பிரம்மாண்ட ‘பிக்பாஸ்’ அரங்கு
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 10- வது சீசன், நாளை (செப்.6) மாலை 6 மணி முதல் தொடங்க உள்ளது. இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்து சுவாரஸ்ய நிகழ்ச்சிகளையும் 24 மணி நேரமும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாகப் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீடு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 45 நாட்கள் உழைப்பில் இந்த அரங்கை வடிவமைத்துள்ளனர். இது 10-வது சீசன் என்பதால் அதைக் குறிக்கும் வகையில் 10 என்ற எண்ணை வெளிப்படையாகக் காட்டாமல், கட்டிட வடிவமைப்பிலேயே உணர்த்தும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
“இங்கு 54-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சீசனில் பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களும் (காமன் மேன்) பங்கேற்பதால், அதைக் குறிக்கும் வகையில் புடைப்புச் சிற்பம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் ஒன்றிணையும் பல்வேறு பட்ட ஆளுமைகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த இல்லம் மாறுபட்ட ஆற்றல்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் அனுபவத்தில் எப்போதும் முக்கியமான இடமாகத் திகழும் சமையலறை, இந்த சீசனில் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது” என பிக்பாஸ் குழு தெரிவித்துள்ளது.